Saturday 21 July 2007

துணை ஜனாதிபதி: காங். கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி


ஜூலை 21, 2007 டெல்லி:

துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் ஹமீத் அன்சாரி போட்டியிடவுள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18ம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஆகஸ்ட் 10ம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி விட்டது. 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் சமாஜ்வாடி எம்.பி. ரஷீத் மசூத் போட்டியிடுகிறார். நேற்று அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் முக்கியக் கூட்டணியான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் இடதுசாரிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளரைத் தேர்வு செய்ய தீவிர ஆலோசனை நடந்து வந்தது. கடந்த சில நாட்களாக கூட்டணித் தலைவர்களிடையே நடந்து வந்த ஆலோசனைகள் நேற்று முடிவு பெற்றன.
இடதுசாரிகள் சார்பில் தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் முகம்மது ஹமீது அன்சாரியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

இதுகுறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து நேற்று மாலை காங். கூட்டணி மற்றும் இடதுசாரிகளின் ஒருஙகிணைப்புக் குழுக் கூட்டம் நடந்தது. அதில் அன்சாரியின் பெயர் இறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்சாரி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தகவலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முறைப்படிஅறிவித்தார்.

யார் இந்த முகம்மது ஹமீது அன்சாரி? 70 வயதாகும் முகம்மது ஹமீது அன்சாரி 1937ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தார். சிம்லாவில் பள்ளிப் படிப்பை முடித்த அவர் பின்னர் கொல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை முடித்தார். பிறகு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் மேல் படிப்பைப் படித்தார். சிவில் சர்வீஸ் தேர்வில் தேறி ஐ.எப்.எஸ். அதிகாரியான பின்னர் ஆப்கானிஸ்தான், ஈரான், சவூதி அரேபியா, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தூதராகப் பணியாற்றினார். தற்போது தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக மட்டுமல்லாமல், அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணைவேந்தராகவும் உள்ளார். ஐ.நா. சபையில் இந்தியாவின் சார்பில் நிரந்தர உறுப்பினராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

மத்திய அரசின் பத்மஸ்ரீ பட்டம் பெற்ற அன்சாரி, பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார்.

அடுத்த முக்கிய கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் கூட்டணியும், 3வது கூட்டணியும் முஸ்லீம் வேட்பாளர்களை அறிவித்துள்ளால் பாஜகவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்தக் கூட்டணியும் முஸ்லீம் வேட்பாளரை நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் தேர்தலில் இரு முனைப் போட்டி நிலவியது. ஆனால் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்படவுள்ளது. துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.பிக்கள் மட்டுமே வாக்களிப்பார்கள், எம்.எல்.ஏக்கள் இதில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: