Sunday 15 July 2007








பள்ளிவாசலுக்கு இடையூறு செய்யும் பேரூராட்சி

அதிரை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதே அல்அமீன் பள்ளியின் பேருந்து நிலைய வாசலை அதிரை பஞ்சாயத்து போர்ட் நிர்வாகம் எவ்வித முன்னறிவூபும் இன்றி அடைத்துள்ளது.
பஞ்சாயத்து போர்டுக்கும் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டிக்கும் இடையேயான நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பேரூராட்சியின் இத்தகைய அடாவடி நடவடிக்கையால் இன்று மாலை (14-07-2007) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அதிரை முஸ்லிம்கள் ஒன்றுகூடி பள்ளிவாசலில் ஆலோசனை நடத்தினர்.
இதனால் எழுந்துள்ள அனாவசிய பதட்டத்தைத் தனிக்க காவல்துறையினர் பேருந்துநிலைய பள்ளிவாசல் அருகே பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.பேரூராட்சி அலுவலரின் அத்துமீறிய செயலைக் கண்டித்து அதிரையில் நோட்டீஸ் மூலம் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளதைக் காணமுடிந்தது.
மத்தியிலும் மாநிலத்திலும் மதநல்லிணக்க அரசுகள் அமைந்துள்ளதைப் பொறுக்க முடியாத சில மதவாத சக்திகள் சிலவருடங்களுக்கு முன் நமதூரின் அமைதிக்கும் மதநல்லிணக்கத்திற்கும் வேட்டுவைக்க மேலத்தெருவில் முஸ்லிம்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதியில் 'திடீர்' முனிக்கோவிலை ஏற்படுத்தினர்.
உயர்நீதிமன்றம் தலையிட்டு, மதநல்லிணக்கத்திற்கு ஊறு செய்யும் இத்தகையச் செயல்களை தடுத்து நிறுத்த முன்வந்தது குறிப்பிடத் தக்கது.
அதிரை நகர உலமாக்கள் மற்றும் ஊர்ப்பெரியவர்களின் ஆலோசனைப்படி, எத்தகைய பிரச்சினைகளையும் சட்டரீதியில் அணுகுவது என்றும், பேரூராட்சி அலுவலருடன் சேர்ந்து கொண்டு மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் சில விஷமிகளும் கூட்டு சேர்ந்துகொண்டு தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பில் சொல்லப்பட்டது.
தொழுகைக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்றும் சில மதவாத சக்திகள் மட்டுமே தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேவையற்ற வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்படும் செயல்களில் எவரும் ஈடுபட்டு நம்தூரின் பொதுஅமைதிக்குப் பங்கம் வந்து விடக்கூடாது என்பதே அதிரை நலன்விரும்பிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு.

No comments: