Wednesday 11 July 2007



விடைபெறுகிறார் கலாம்!
குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பதவிக்காலம் முடிவடைகிறது. விடைபெற்றுக் கொள்கிறார் கலாம். தோல்வியில்லாத வெற்றி நிச்சயமானால் தேர்தலில் நிற்பேன் என்ற அவர், அவ்வித வெற்றி உறுதியில்லாததால் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று அறிவித்துவிட்டார்.
யாருடைய வற்புறுத்தலுக்கும் அவர் இணங்கவில்லை. பதவி ஏற்றது முதல் இன்றுவரை தமக்கென ஒரு தனித்த, பண்பட்ட பாணியைக் கொண்டு இயங்கியவர். நேரு குழந்தை களிடம் புகழ்பெற்றிருந்தது போல், கலாம் இளைஞர்களிடம் முக்கியமாக மாணவ மாணவியரிடம் பெரும்புகழ் பெற்றிருந்தார்.
இளைஞர்களின் நல்வாழ்வுக்கான பல அரிய யோசனைகளை அவ்வப்போது தெரிவித்துக் கொண்டிருந்தார்.
அவர் சார்பில் அவரது அலுவலகம் மின்னஞ்சலில் ஏராளமான பேருடன் நல்லுறவு கொண்டிருந்தது.
அனுப்பிய கடிதங்களுக்கு உடனடி பதில் வழங்கியதில் அவரைப் போல் சுறுசுறுப்பானவர்கள் குறைவு.
தமிழகத்திலிருந்து தில்லி சென்ற ஏராளமான பேர், ஒரு தமிழர் குடியரசுத் தலைவராக இருக்கிறார் என்ற பெருமிதத்தோடு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
காந்திக்குப் பின் நேரு, ராஜாஜி, காமராஜ் என்றெல்லாம் அகில உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் வரிசையில் தம்மையும் வைத்து எண்ணுமாறு செய்துவிட்டார் இந்த விண்வெளி விஞ்ஞானி.இவர் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் இந்தியாவின் மதிப்பும் மரியாதையும் விண்ணுயரம் சென்றன. இனி யாரேனும் ஒருவர் தேர்தலில் வெற்றிபெற்று குடியரசுத் தலைவர் ஆவார்.
அவரது செயல்பாடுகள் பற்றி எதிர்காலம் சொல்லும். ஆனால் குடியரசுத் தலைவர்கள் வரிசையில் தம் முத்திரையைப் பதித்த அப்துல் கலாமின் செயல்பாடுகள் பற்றி வரலாறு சொல்லும்.

No comments: