Monday, 9 July 2007

இவர்களின் அவஸ்த்தைகள்

வளம் கொழிக்கும் வளைகுடா நாடான துபாயில் உள்ள இந்திய தொழிலாளர்கள் எத்தகைய சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதனை நாம் அறிந்தால், நமக்கு வேதனை தான் மிஞ்சும்। துபாயிலிருந்து வெளிவரும் தினசரி நாளிதழ் அனைத்தும் இவர்களின் நிலைமைகளை பற்றி அரசுக்கும், அரசுத்துறை சார்ந்த அனைவருக்கும் பத்திரிகை வாயிலாக வழியுறுத்தி சொன்னாலும் அவர்கள் தொழிலாளர்களின் ஒரு சில பிரச்சனைகளை தான் தீர்க்க முடிகிறது। ஏனென்றால் வளைகுடாவிலும் சில பண முதலைகள் இருப்பதால் ஒரு சில நிறுவனங்கள் செய்யும் தவறானது யாருக்கும் தெரியாமல் போய் விடுகிறது। சமீபத்தில் துபாய் அரசாங்கமானது தொழிலாளர்கள் வெயில் காலங்களில் கடும் வேதனை படுவார்கள் என்பதனை மனதில் கொண்டு ஜீன் ஜீலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் கட்டிட பணி புரியும் தொழிலாளர்களுக்காக வேண்டி பகல் நேரத்தில் அதாவது மதியம் 12।30 முதல் மாலை 3 மணி வரை பணி புரிய கூடாது என்ற சட்டத்தினை ஏற்றி இருந்தது। ஆனாலும் இதனை மீறி கொண்டும் சில நிறுவனங்கள் இருக்கின்றன, என்பதனை அறியும் போது கொஞ்சம் வேதனை தான். சமீபத்தில் துபாயில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, ஆசிய நாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் மன வேதனையாலும், மன பாரத்தாலும், மன கஷ்டத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது. இங்கு இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் நாட்டினை சேர்ந்த பலர் அடிப்படை தொழிலாளர்களாக தான் இருக்கிறார்கள். துபாயில் உள்ள பல அடிப்படை தொழிலாளர்களின் சம்பளமானது இங்குள்ள பணத்திற்கு 400 திர்ஹத்திற்கு குறைவாக தான் இருக்கிறது. அதில் அவர்கள் சாப்பாட்டிற்க்கும், தங்கி இருக்கும் இடத்திற்கும் வாடகை கொடுக்க வேண்டும். இந்த பணத்தினை கொண்டுதான் தாயகத்தில் உள்ள மனைவிக்கும், தாய்க்கும் அனுப்ப வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் என்ன செய்வார்கள்?. வெளிநாடு என்றால் அதுவும் முக்கியமாக துபாய் என்றால் அதிகம் சம்பாதிக்கலாம் என்ற மில்லியனிய கனவுகளுடன் தாய், தந்தை, மனைவி, பெற்ற குழந்தைகள், உற்றார் உறவினர்கள் ஆகியோர்களை விட்டு பிரித்து பல வருடங்கள் இங்கு வசிப்பதால் தனிமை என்ற சூழ்நிலைக்கு வெகு விரைவில் ஆளாகி விடுகிறார்கள்; என்றால் மிகையாகாது. இதனால் அவர்களுடைய எண்ணங்களானது ஒரு சில கெட்ட வழியில் அவர்களை இழுத்து செல்கிறது. ஆம்॥ இங்கு மதுக்கோப்பைகளுக்கும்;, மாதுக்கும் அடிமையான இளைய சமுதாயமானது சீரழிவு பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது. இவர்களை நல் வழிக்கு கொண்டு செல்ல வேண்டும் ஒரு சில நண்பர்கள் முயற்சி எடுத்தாலும் அவர்களின் போக்கினை திருத்த முடிய வில்லை. என்ன செய்வது...?॥!மனக்கஷ்டத்தாலும், மன பாரத்தாலும், மற்றும் பல சூழ்நிலையாலும் இங்குள்ள பல இளைஞர் மற்றும் இளைஞிகள் தற்கொலை செய்யும் முயற்சியிலும் மேற்கொண்டு வருகிறார்கள். இங்குள்ள பத்திரிகையில் வந்த செய்தியானது என்ன சொல்கிறது என்றால், 2004 வருடத்தில் இந்தியாவை சேர்ந்த 70 பேர்களும், 2005 வருடத்தில் 84 பேர்களும், 2006 வருட கணக்கின் படி 15 பேர்களும் தற்கொலை செய்துக்கொண்டனர் என்று குறிப்பிடுகிறது. இதனை படிக்கும் போது நம் கண்கள் கண்ணீரால் குளமாகிறது. இனி வரும் காலங்களில் தற்கொலை செய்து கொள்பவர்களின் அளவானது அதிகரிக்க செய்யும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.இவர்களின் மன கஷ்டத்தினை குறைக்க வேண்டி, ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு தொலைக்காட்சி வசதியினை ஏற்பாடு செய்து கொடுத்து உள்ளது. ஆனால் பல நிறுவனங்கள் அத்தகைய வசதியினை ஏற்பாடு செய்து தருவதில்லை என்பது இங்கு உள்ள தொழிலாளர்களின் குறைகளாக உள்ளது. ஆகையால் வேலை முடிந்தவுடனோ அல்லது விடுமுறை தினமான வெள்ளிக்கிழமைகளில் தன்னுடைய நண்பர்களை சந்திப்பதற்கு தொலைதுரங்களுக்கு ஒரு சில தொழிலாளர்கள் செல்ல வேண்டி இருக்கிறது. இவற்றிற்கு அந்த நிறுவனங்கள் வசதி வாய்ப்பினை ஏற்பாடு செய்து தருவதில்லை. அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள், மற்றும் சில பெரிய நிறுவனங்கள் இத்தகைய வசதியினை அவர்களுக்கு செய்கிறது. மற்றவர்கள் தன்னுடைய நண்பர்கள் தாம் தங்கி இருக்கும் இடத்திற்கு வெளியே சந்தித்து பேசிக்கொள்கிறார்கள். இவர்களின் பேச்சுக்கள் இங்கு இருந்தாலும் நினைவுகளோ தாய் நாட்டை சுற்றித்தான் இருக்கும். துபாய் நகரினை விட்டு பத்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அல்கூஸ் (Al QUAZ) மற்றும் ஜெபல் அலி (JEBEL ALI) போன்ற இடங்களிலும் மற்றும் பல இடங்களில் உள்ள தொழிலாளர்கள் தாங்களின் நண்பர்களை விடுமுறை நாள்களில் துபாய் நைப் சாலைகளில் (Naif Road); சந்தித்து தாங்களின் சுக துக்கங்களை பகிர்ந்துக்கொள்கிறார்கள்;. அப்போது அவர்களின் பேச்சானது அதிகளவில் மதுவினையும், மங்கையினை பற்றி தான் இருக்கும் என்பது திண்ணமாகும். ஏனெனில் அந்த சாலையினை பற்றி அங்கு இருக்கும் நண்பர்களிடம் கேட்டால் தெரிந்து கொள்ளலாம். இத்தகைய பேச்சுகளுக்காக தான் இங்குள்ள பலர் பணத்தினை வீண் விரயம் செய்கிறார்கள். அஜ்மான் (AJMAN) மற்றும் உம்மல்குய்ன் (UMM AL QAWAIN) போன்ற மற்ற அமீரகத்தில் மது பாட்டில்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது அதனை சட்டத்திற்கு விரோதமாக அதிகளவில் கடத்தி வந்து, மற்ற பகுதிகளான அபுதாபி, ஷார்ஜா, ஃபுஜைரா போன்ற இடங்களுக்கு கொண்டு வந்து, தாங்கள் இருக்கும் இடத்தில் உள்ள மணற் பரப்பில் யாருக்கும் தெரியாமல் புதைத்து வைத்து மற்றவர்களுக்கு அதிகமான லாபத்திற்கு விற்பனை செய்கிறார்கள். இதுவும் சட்ட விரோதமாக செயல் தான். இது போல் உள்ள செயல்களை செய்து காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பபட்ட எத்தனையோ சகோதரர்கள் இருக்கிறார்கள். இருந்துக்கொண்டும் இருக்கிறார்கள். மது அருந்தி விட்டு இவர்கள் செய்யும் அனாச்சாரங்கள் அட்டூழியங்கள் அதிகமான அளவில் தான் உள்ளன. இன்னும் ஒரு கொடுமை என்னவென்றால், ஓரினச்சேர்க்கைக்கு அடிமையான பல இளைஞர்களும் இங்கு இருக்கிறார்கள். பர்துபாய் மற்றும் தேரா துபாய் போன்ற பகுதிகளில் மற்ற நாட்டினை சார்ந்த பலர் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். இந்த பகுதிகளில் உள்ள இத்தகைய இளைஞர்கள் குடித்து விட்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் வரம்பு மீறிய பேச்சுகளானது அத்தகைய குடும்ப பெண்களையும், கடை தெருவிற்கு ஷாப்பிங் வரும் பெண்களையும் கேலி செய்யும் அளவிற்கு போய் விடுகிறது. இதனால் அத்தகைய குடும்ப பெண்கள் சரியே, மற்ற பெண்களும் சரியே அருகில் உள்ள காவல் துறைகளில் புகார்கள் கொடுக்கிறார்கள் நாள் தோறும். ஆகையால் தற்போது குடும்பங்கள் உள்ள பகுதிகளில் இளைஞர்கள் யாரும் வசிக்கக்கூடாது என்ற சட்டத்தினையும் கடுமையாக்கி உள்ளது துபாய் அரசாங்கம். இதனால் இளைஞர்கள் கொஞ்சம் கொஞ்சமாக துபாய் நகரினை விட்டு கொஞ்சம் தூரமான இடங்களுக்கு போய்க்கொண்டு இருக்கிறார்கள்.வண்ணக்கனவுகளுடன், தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று எத்தனையோ உள்ளங்கள் தாய்நாடு செல்லும் போது உணர்ச்சியற்ற நிலையில் தான் செல்கிறார்கள். இந்த பாலைவனத்தில் இவர்களின் வியர்வைகளை மட்டும் அல்ல உணர்வுகளையும் அல்லவா॥ உறிஞ்சுகிறார்கள். பல நிறுவனங்கள் சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் இழுத்தும் அடிக்கிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சம்பளம் தரவில்லை என்பதற்காக வேண்டி பல சாலை போராட்டங்களை நிறுவனத்திற்கு எதிராக இங்குள்ளவர்கள் நடத்தியும் காட்டி இருக்கிறார்கள். சில தினங்களுக்கு துபாய் இந்திய தூதரகத்தினை 350 பேர்கள் கொண்ட தொழிலாளர்கள் முற்றுகையிட்டு தாங்களின் கோரிக்கைகளை வைத்தனார். மருத்துவ வசதிக்கான செலவு, விமான பயணச்சீட்டு செலவு, பிடித்து வைக்கப்பட்ட சம்பளம், விடுப்பு கால சம்பளம் மற்றும் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். துபாயில் பிக் பாக்கெட் திருடர்களின் தொல்லையும் தற்போது அதிகரித்து விட்டது. பேருந்து நிலையம், கடை வளாகம், பொது மக்கள் கூடும் இடங்களில் இத்தகை கயவர்களின் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து விட்டது என்ற செய்தியினை Khaleej Times பத்திரிகை 24.06.2007 அன்று வெளியிட்டது.இத்தகைய நிலைமைக்கு எல்லாம் யார் காரணம் என்று சொன்னால், நம்மிடையே கல்வி அறிவானது இல்லாமல் ஆகி விட்டது என்பதனை ஆணித்தரமாக சொல்லலாம். நன்கு படித்து இருந்து இருந்தால் இங்கேயே ஒரு நல்ல வேலையில் சேர்ந்து இருக்கலாம் என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது. இருந்தாலும் என்ன செய்வது॥ என்ற கேள்விகளுடன் பதில் கிடைக்காமல் பல இளைஞர்கள் மாட்டிக்கொண்டனர். இத்தகைய நிலைமைக்கு நம்முடைய தலை முறையினர் வந்து மாட்டிக்கொள்ளாமல் நாம் அவர்களுக்கு நன் முறையில் கல்வியினை போதிக்கச் செய்வோமாக॥ அறிவுள்ளவர்களாக வளர்ப்போமாக.. விழிப்புணர்வு பெறுவோமாக.. கெட்டது அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், 'கெட்டதும், நல்லதும் சமமாகாது' என (நபியே) நீர் கூறுவீராக ! ஆகவே அறிவாளிகளே! அல்லாஹ்வுக்குப் பயந்து (தீயவற்றிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றியடைவீர்கள். அல்குர்ஆன் - 5 : 100நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,'மறுமை நாளில் ஓர் அடியான் கீழக்கண்ட நான்கு வினாக்களுக்கு அல்லாஹ்வினடம் பதிலளிக்காத வரை ஒரு அடி கூட நகர முடியாது.1. உனது வாழ்க்கை எந்த வழிகளில் செலவிட்டாய்?2. உனது இளமைப் பருவத்தை எந்த வழிகளில் செலவிட்டாய்?3. எவ்வழிகளில் சம்பாதித்தாய்? எவ்வழிகளில் அதை செலவிட்டாய்?4. பெற்ற கல்வியின் மூலம் என்ன செய்தாய்?அறிவிப்பாளர்: முஆத் பின் ஜபல் (ரலி) - ஆதாரம்: ஃதபரானீ

No comments: