Saturday 21 July 2007

பிரதீபா பாட்டீல் வெற்றி-நாட்டின் முதல் பெண் ஜனாதிபதியாகிறார்




ஜூலை 21, 2007 டெல்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரதீபா பாட்டீல் பெரும் வெற்றி பெற்றார்.

இதன் மூலம் நாட்டின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை பிரதீபா பெறுகிறார். தன்னை எதிர்த்து பாஜக கூட்டணி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிட்ட துணை ஜனாதிபதி பைரான் சிங் ஷெகாவத்தை 3 லட்சத்து 6 ஆயிரத்து 810 மதிப்புள்ள வாக்குகள் வித்தியாசத்தில் பாட்டீல் தோற்கடித்தார். குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிவடைவதையொட்டி அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 19ம் தேதி நடைபெற்றது. விறுவிறுப்பான வாக்குப் பதிவுக்குப் பின் நேற்று அனைத்து மாநிலங்களிலுமிருந்து வாக்குப் பெட்டிகள் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டன.
இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் வாக்குப் பதிவு தொடங்கியது. முதலில் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. பின்னர் அகர வரிசைப்படி மாநிலங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. ஆரம்பத்தில் இருந்தே வாக்கு எண்ணிக்கையில் பிரதீபா பாட்டீலே முன்னிலையில் இருந்தார். மாலை 5 மணியளவில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்தது. அதில் பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிரதீபா வென்றார்.

பிரதீபாவுக்கு 442 எம்பிக்களின் வாக்குகளும் ஷெகாவத்துக்கு 232 எம்பிக்களின் வாக்குகளும் கிடைத்துள்ளன. அதே போல எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பொறுத்தவரை பிரதீபாவுக்கு 3,25,180 மதிப்புள்ள வாக்குகள் கிடைத்தன. ஷெகாவத்துக்கு 1,67,050 மதிப்புள்ள வாக்குகள் கிடைத்தன.
எம்பிக்களின் வாக்குகளின் மதிப்பையும் சேர்த்து கணக்கிட்டால் 3 லட்சத்து 6 ஆயிரத்து 810 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் பிரதீபா பாட்டீல் ஷெகாவத்தை தோற்கடித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் 13வது ஜனாதிபதியாகிறார் பிரதீபா. இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையையும் பெறுகிறார். வரும் 24ம் தேதி அவர் பதவியேற்க உள்ளார். 72 வயதாகும் பிரதீபா பாட்டீல் வழக்கறிஞராவார்.

45 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வருகிறார். இவர் மகாராஷ்டிர மாநிலம் ஜல்கோவான் பகுதியைச் சேர்ந்தவர். சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களில் பலமுறை வென்று எம்.எல்.ஏ, எம்.பியாக இருந்துள்ளார். மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்தவர்.

இந்திரா காந்தியின் தனிப்பட்ட அன்பை பெற்றவர். சோனியாவுடனும் நெருக்கமாக இருந்து வரும் இவர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் முன் ராஜஸ்தான் ஆளுநராக இருந்தவர். அன்றுடன் அப்துல் கலாமின் பதவிக் காலம் முடிவடைகிறது. ஓய்வுக்குப் பின்னர் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள பங்களாவுக்கு அப்துல் கலாம் செல்கிறார். வழக்கமாக குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுபவருக்கு சம்பிரதாய முறைப்படி வழியனுப்பு விழா நடத்தப்படும்.

ஆனால் அதை கலாம் விரும்புகிறாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை. எளிய முறையில் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறவே கலாம் விரும்புவதாகத் தெரிகிறது.

No comments: