Sunday 22 July 2007

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு ஜாமீன்

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முதன் முதலாக இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டு கோவை நகரில் நடந்த தொடர் வழக்கில் அல் உம்மா தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் ஆகஸ்ட் 1ம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களில் முதல் முறையாக 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

122வது குற்றவாளியான நெளசத், 123வது குற்றவாளியான சர்தார் ஆகியோருக்கு நேற்று கோவை தனி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுக்கும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்படுவதாக நீதிபதி உத்திராபதி தெரிவித்துள்ளார்.

இருவரும் தலா ரூ. 10,000 ரொக்க உத்தரவாதம் செலுத்தி ஜாமீனில் விடுவிக்கப்படலாம் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

இருவரும் வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு குறித்து பத்திரிக்கைகள், டிவிகள் ஆகியவற்றுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.


குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகியுள்ள கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி பலமுறை ஜாமீன் கோரியும் நீதிமன்றம் அளிக்கவில்லை. இந்த நிலையில் முதல் முறையாக இருவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments: