Thursday 13 November 2008

வெட்கித் தலைகுனி!

சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடந்த அந்த மோதலை, கீழே விழுந்து கிடக்கும் மாணவரை நான்கைந்து பேர் கொலை வெறியுடன் கட்டையால் அடிப்பதை, அதற்கு முன்னர் அடிப்பட்டுக் கிடந்த அந்த மாணவர் அடிபடும் தனது சக மாணவரைக் காப்பாற்ற கத்தியை எடுத்துக் கொண்டு பாய்வதை... நாள் முழுவதும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அந்த காட்சிகளை, பத்திரிக்கைகளில் வெளியான அந்தப் புகைப்படங்களை, மருத்துவமனையில் கட்டுடன் சிகிச்சை பெற்றுவரும் அந்த மாணவர்களின் படங்களை பார்‌ப்போர் நெஞ்சமெல்லாம் பதறியிருக்கும்.

படிக்கச் சென்ற மாணவர்கள், அதுவும் சட்டம் படிக்கச் சென்ற மாணவர்கள், தாங்கள் அடிக்க வேண்டிய மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டு வெளியே வருவதற்காக கட்டை, கம்பி, மண் வெட்டி ஆகியவற்றுடன் காத்திருந்த காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமின்றி, இரண்டு மாணவர்களைப் மற்ற பல மாணவர்கள் கொலை வெறியோடு தாக்குவதையும் எவ்வித பதற்றமும் இன்றி பார்த்துக்கொண்டிருந்த காட்சியையும் கண்ணுற்ற மக்களுக்கு உள்ளபடியே நெஞ்சு பற்றி எரிந்திருக்கும்.ஒரு போர்‌க்களம் போல மாணவர்கள் அடித்துக் கொண்டு சாகிற நிலையிலும், யாருக்கோ வந்த விருந்து போல கவலைப்படாமல் தனது அலுவலகத்தில் உட்கார்ந்திருந்த சட்டக் கல்லூரியின் முதல்வரின் நடத்தை, அவர் என்ன கல்லூரி முதல்வரா அல்லது அடிதடிக் கூட்டத்தின் தலைவரா என்று கேள்வியையும் எழுப்பியிருக்கும்.

பிரச்சனை ஏற்படப்போகிறது என்று தெரிந்தும், ஐம்பதிற்கும் மேற்பட்ட காவலர்களுடன் அங்கிருந்த காவல் அதிகாரி எந்த தடுப்பு நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை.தடுப்பு நடவடிக்கை எடுக்காத ஒரு காவல் அதிகாரி அத்தனை காவலர்களுடன் எதற்காக ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பிருந்தே அங்கு இருந்ததார் என்பதும் புரியவில்லை.கல்லூரி முதல்வர் புகார் தரும் வரை நடவடிக்கை எதையும் எடுக்கப் போவதில்லை என்று முடிவோடு இருந்த அந்த காவல் அதிகாரி, எதற்காக தனது படையினருடன் அங்கு வந்து காத்திருக்க வேண்டும்? திரைப்படத்தில் கூட இப்படியொரு காட்சியைக் காணாத மக்களுக்கு காவல் துறையினரின் நடவடிக்கை மிகவும் வினோதமாகத் தெரிகிறது.

இதைப்பற்றி பேசிய மற்ற மாணவர்கள், இதையெல்லாம் முன்பே தடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். எனவே, கல்லூரி நிர்வாகம் முதல் காவல் துறை வரை தடுத்திருக்க வேண்டிய ஒரு நிகழ்வை, நடக்க விட்டுவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார்கள் என்பது புலனாகிறது.

அம்பேத்கர் பெயரைத் தவிர்த்தவர்களை எதிர்த்துப் புறப்பட்ட அந்த மாணவர்கள் யாராவது அவருடைய நூல்களை ஓரளவிற்காவது படித்திருப்பார்களா? படித்திருந்தால் இந்தச் சமூகத்தில் புறையோடிப் போயிருக்கும் இந்த சாதிய அசிங்கத்தை சிந்தனையாலும், ஒருமித்த செயலாலும் துடைத்தெறிய முயன்றிருப்பார்களே? இப்படி கட்டையை தூக்கிக்கொண்டு காத்திருந்து அடிப்பதில் கவனத்தை செலுத்தியிருக்க மாட்டார்களே? இந்தத் தேசத்தின் எதிர்காலத்திற்காக வாழ்ந்த இரண்டு மாபெரும் தலைவர்களை சாதியத் தலைவர்களாக்கி, அவர்களுக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்துக்கொண்டு சிறுமைபடுத்தும் சில அரசியல், சமூதாய அமைப்புகளைப் போல, மாணவர்களும் நடந்துகொண்டிருப்பது நம்மை வெட்கித் தலை குனியச் செய்கிறது.

இந்த சாதிய மாயை? தெளியுமா நமது சமூக சிந்தனை?

நன்றி : வெப் துனியா

No comments: