Sunday 16 November 2008

~மக்கள் உரிமை~யின் மண்டையில் உறைக்கட்டும்!

த.மு.மு.க. புதிதாக அரசியல் கட்சி தொடங்குகிறதாம் - தொடங்கட்டும்...ஆனால்..... அதற்கு ஏன் முஸ்லிம் லீகை வம்புக்கு இழுக்க வேண்டும்?
புதிய கட்சியை விரும்பி தொடங்கவில்லையாம்... மாறாக சமுதாய நிர்ப்பந்தத்தில் தொடங்குகிறார்களாம்... அவர்களின் ~மக்கள் உரிமை~ வார ஏடு சொல்கிறது.
விருப்பம் எப்போதிருந்து - ஏன் வந்தது என்பதற்கு (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்) அவர்களின் ~முன்னாள் நண்பர்கள் பதில் சொல்லியும் ~உணர்வு~ வரவில்லையா?
அவர்கள் கட்சி தொடங்க சமுதாய நிர்ப்பந்தமாம் - அடடடடடா.....தமிழ்நாட்டின் பன்னிரண்டாயிரம் பள்ளிவாயில் களும் மஹல்லா ஜமாஅத்தும், ~நீங்கள் கட்சி தொடங்கி எங்களை காப்பாற்றுங்கள் என்று வரிசையில் நின்றல்லவா இவர்களை கெஞ்சினார்கள்?
மாபெரும் முஸ்லிம் லீக் மாநாடும் சமுதாயம், யார் பக்கம் எனச் சொல்லிக் காட்டியது. பங்கேற்ற தோழமைத் தலைவர்கள் பாராட்டி மகிழ்ந்தனர். பத்திரிகைகள் அனைத்தும் வித்தியாசம் பாராமல் வியந்து எழுதின. ஆனால்...~மக்கள் உரிமைக்கு~ மட்டும் இது ~நோயாளி கட்சி~யாக தெரிகிறதாம்.

அவர்களுக்கு அப்படித்தான் தெரியும்.

கருப்புக் கண்ணாடி உயர்த்தப்பட்ட சிவப்பு விளக்கு சுழலும் ஏ.சி. காரில் ஓசி பயணம் செல்பவர்களுக்கு இந்த மாபெரும் எழுச்சி தெரியவா போகிறது?தென்காசி கலவரம் - முஸ்லிம் சிறைவாசிகள் பிரச்சினையில் முஸ்லிம் லீக் குரல் எதிரொலிக்கவில்லையாம்.சொல்வது யார் தெரியுமா......?
நம் சமுதாயத்தின் அணிவகுப்பை சீர்குலைத்தவர்கள்!சகோதர சமுதாயங்களோடு நல்லுறவை நாசமாக்கி யவர்கள் - அப்பாவி இளைஞர்களின் உணர்ச்சிகளை தூண்டி ~உள்ளே~ தள்ளி விட்டு அவர்கள் குடும்பங்களை நடுவீதிக்கு கொண்டு வந்தவர்கள்!!
இவர்கள் கூற்றுக்கு இந்த மாதத்தின் அத்தனை முஸ்லிம் பத்திரிகைகளும் பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
என்ன செய்வது? இந்த முழக்கம் இவர்களுக்கு மட்டும் கேட்கவில்லையெனில் கோளாறு அவர்கள் காதுகளில்தான்!
ஏன்....~வக்ஃபு வாரிய தலைவர்~ பதவியை வாதாடி போராடி கெஞ்சி கூத்தாடி கேட்டுப் பெற்றதற்கு பதில் ~முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை~யை கேட்டுப் பெற்றிருந்தால்...
இல்லை.... இல்லை.....10 ஆண்டு காலம் சிறையில் வாடும் த.மு.மு.க.வின் நிறுவனத் தலைவர் குணங்குடி ஆர்.எம்.அனிபா அவர்களின் விடுதலையை மட்டுமாவது கேட்டுப் பெற்றிருந்தால் இவர்கள்தான் உண்மையான சமுதாய காவலர்கள் என பாராட்டு விழாவே நடத்தியிருப்போம் என்று சமுதாயம் சொல்கிறது.
ஆனால்.... எந்த இயக்கத்தால் வளர்ந்தார்களோ அந்த ~சிமி~ இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்டதையே கண்டுகொள்ளாதவர்கள் இந்த அப்பாவிகளை கண்டுகொள்ளப் போகிறார்களா என சமுதாயம் முணுமுணுப்பதும் நம் காதில் விழுகிறது.

'இறைவனை நம்பி தூய எண்ணங்களோடு" கட்சிதொடங்குகிறார்களாம். அடடா... எவ்வளவு இறை பக்தி! எத்தனை தூய எண்ணம்!! 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்றைக்கும் அரசியலுக்கு வரமாட்டோம்" என பொது மேடையில் சத்தியம் செய்தவர்கள்...
~அந்த சத்தியம் என்னாயிற்று?
என அல்லாஹ் கேட்கவா போகிறான் என்ற அலட்சியத்தில் இன்று அவனை வம்புக்கு இழுக்கின்றனர்.

'சபிக்கப்பட்ட ஷைத்தானை விட்டும், சாக்கடை அரசியலை விட்டும் பாதுகாப்பு தேடுகிறோம்" என மேடைதோறும் சொல்லிவிட்டு, இன்று என்ன தூய எண்ணத்தோடு அரசியல் கட்சி தொடங்குகிறார்களே...?
சாக்கடை சுத்தமாகி விட்டதா? அல்லது அவர்கள் சாக்கடையாகி விட்டார்களா...?
என்றெல்லாம் எங்களுக்குக் கேட்கத் தெரியாது.
~பொதுச் செயலாளருக்கே~ வாரியத் தலைவர் பதவி என்றால் ~தலைவருக்கும்~ ஒரு பதவி வேண்டாமா? என்ற ஆசையின் வெளிப்பாடுதான் அவர்களின் அரசியல் பிரசவம்.
இதை சமுதாயம் தெளிவாகவே புரிந்து வைத்திருக்கிறது.

தூய எண்ணத்தோடு கட்சி தொடங்குபவர்களுக்கு ஒரு கேள்வி:

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் முஸ்லிம் லீக் தலைவர்களை சுயநலவாதிகள் என வர்ணித்தவர்களே...!
இந்த ஒப்பந்தம் தொடர்பாக முஸ்லிம் லீகின் நிலைப்பாட்டை இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய நிர்வாகிகள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.இதுதொடர்பான செய்திகளும், சிறப்புக் கட்டுரையும் ~மணிச்சுடரில்~ வெளிவந்துள்ளன.

புகைக்கு பயந்து நெருப்பில் விழுவது புத்திசாலித்தனம் அல்ல!அணுசக்தி ஒப்பந்தம் என்ற புகையைவிட பாரதீய ஜனதா ஆட்சி என்ற நெருப்பு பயங்கரமானது.

எனவே....த.மு.மு.க. ஊருக்கு உபதேசம் செய்ய வேண்டாம்.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தி.மு.க. ஒரு பிரதான கட்சி. அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற அது ஆதரவளிக்கிறது.இப்படி ஆதரவளிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அதற்கு அடையாளமாக தி.மு.க. எங்களுக்குத் தந்த வக்ஃபு வாரிய தலைவர் பதவியை திரும்ப தருகிறோம் என்று சொல்லி பதவி விலகல் கடிதத்தையும், சிவப்பு விளக்கு காரையும் கொடுத்து விட்டு தங்கள் தூய எண்ணத்தை நிரூபித்து காட்டட்டும்.

அதற்கு சுயநலம் தடையாக இருக்கும் எனில் த.மு.மு.க. வாயை மூடிக்கொண்டு ஆம்புலன்ஸ் வேன்களில் ஜனாஸா வேலையை மட்டும் பார்க்கட்டும்.

நன்றி :முஸ்லிம் லீக் அதிரை கிளை

No comments: