Saturday 7 June 2008

ஹோட்டல்களில் விலையோடு அளவும் குறைப்பு - ஊறுகாய் கூட இல்லை!



முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் பரிசாக ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பண்டங்களின் விலைக் குறைப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விலையோடு சேர்த்து அளவைக் குறைத்து விட்ட ஹோட்டல்காரர்கள், சாப்பாட்டுக்கு ஊறுகாய் கூட வைப்பதில்லை என்று மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

தமிழக ஹோட்டல்களில் அதிகரித்து விட்ட உணவுப் பண்டங்களின் விலையை குறைப்பது குறித்து இரு முறை ஹோட்டல் அதிபர்கள் சங்க நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் இறுதியில் 15 சதவீத அளவுக்கு விலைக்குறைப்பு செய்ய ஹோட்டல்காரர்கள் முடிவு செய்தனர்.

முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் முதல் இது அமலுக்கு வந்தது. அதன்படி இட்லி, வடை உள்ளிட்ட பொருட்களின் விலையில் ரூ. 1 வரை குறைக்கப்பட்டது. அளவுச் சாப்பாடு ரூ.20க்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 20 ரூபாய்க்கு வழங்கப்படும் சாப்பாடு, கொஞ்சம் கூட திருப்தி தருவதாக இல்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
பல ஹோட்டல்களி்ல் தரப்படும் 20 ரூபாய் சாப்பாடு மகா மோசமாக இருக்கிறது. கவுன்ட்டரில் போய் ரூ.20 சாப்பாடு கொடுங்கள் என்றால், ஏதோ கொலையாளியைப் பார்ப்பது போல மேலும், கீழுமாய் பார்க்கிறார்கள். ஒரு தடவைக்கு மூன்று தடவை 20 ரூபாய் சாப்பாடா என்று கேட்டுவிட்டு டோக்கனை கொடுக்கிறார்கள்.

அப்பளம் அளவுள்ள சிறிய தட்டில் பாதியளவுதான் சாப்பாடு இருக்கிறது. 2வது முறை கூட்டு, பொரியல் கேட்டால், மறுத்து விடுகிறார்கள். ஊறுகாயைக் கூட கண்ணில் காட்டுவதில்லை.

இது சாப்பாடு போலவே இல்லை. சாப்பாட்டுக்கு முன்பு வைக்கப்படும் 'ஸ்டார்ட்டர்' போல இருக்கிறது. இதே சாப்பாட்டை மூன்று முறை சாப்பிட்டால்தான் சாப்பிட்டது போல இருக்கும் என்கிறார்கள்.
பல ஹோட்டல்களில் விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வைக்கப்படவில்லை.

சாப்பாடு தவிர இட்லி, வடை, பொங்கல், பூரி ஆகியவற்றின் விலையும் பெரிய அளவில் குறையவில்லை. அதேசமயம், பெரும்பாலான ஹோட்டல்களில் சைஸைக் குறைத்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்கு வழங்கும் பிறந்த நாள் பரிசு என்று கூறி விட்டு அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல இப்படி ஹோட்டல்காரர்கள் நடந்து கொள்வது தவறு என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

No comments: