Thursday 5 June 2008

இராமர் பாலம் : நம்பிக்கையின் பெயரால் நீதிக்கு மிரட்டல்

800 மில்லியன் (80 கோடி) இந்திய மக்கள் அதனை (இராமர் பாலத்தை) கட்டியது இராமர்தான் என்று நம்புகிறார்கள். கடவுளான இராமர் இருந்தாரா அல்லது அவர்தான் அந்த பாலத்தைக் கட்டினாரா என்ற பிரச்சனைக்குள் நீதிமன்றம் நுழைய முடியுமா?”

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையில், தண்டி மடாதிபதி வித்யானந்த பாரதி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் எழுப்பியுள்ள கேள்வி இது.

தனது வாதத்திற்கு ஆதரவாக (ஆதாரமாக) மற்றொரு கேள்வியையும் வழக்கறிஞர் வேணுகோபால் எழுப்பியுள்ளார்: “இந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இதனை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? இவையெல்லாம் மக்களின் நம்பிக்கைகள், அவைகளை நீதிமன்றங்களோ அல்லது அரசுகளோ விசாரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை துவக்கும் போது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அப்பொழுதெல்லாம் இராமர் பாலம் பாதிக்கப்படும் என்று எந்தக் குரலும் கொடுக்காமல், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒரு செயற்கைக் கோள் படத்தை வெளியிட்டவுடன் “இதுதான் இராமர் கட்டிய பாலம்” என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள், அதனை நிரூபிக்க ஆதாரமேதும் இல்லையென்பது தெளிவானவுடன் நம்பிக்கையை கையிலெடுத்துள்ளது மட்டுமின்றி, அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சட்டத்தை மிரட்டும் அளவிற்கு இறங்கியுள்ளதையே இந்த வாதங்களும் கேள்விகளும் உணர்த்துகின்றன.

சேது சமுத்திர கால்வாய் பகுதியில் உள்ள நிலத்திட்டுகள் இராமர் பாலமே என்றும், அது புராதன காலத்தில் கட்டப்பட்டது என்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ள வழக்கறிஞர் வேணுகோபால், அந்த ஆதாரத்தின் அடிப்படையில் இராமர் பாலத்தை மெய்பிக்க வாதிட்டிருந்தால் அது சட்டப் பூர்வமான வாதமாக இருந்திருக்கும்.

ஆனால், அந்த ஆதாரத்தைச் சார்ந்து நின்று வாத்த்தை எடுத்துரைக்காமல், நம்பிக்கையை பிரச்சனையாக்கி, அதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று வாதிடுவது, “தெய்வத்தின் பேரால் நாங்கள் செல்வதுதான் சட்டம், வழங்குவதுதான் தீர்ப்பு” என்கின்ற புராதன மத ஆட்சிக் காலத்தையே நினைவூட்டுகிறது.

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமியும் இதேபோல், “இராமர் பாலம் என்பது 80 கோடி மக்களின் நம்பிக்கை” என்றுதான் வாதிடுகிறார்.

சுப்பிரமணியம் சுவாமி வாதிடுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் அரசியல்வாதி. எப்படி வேண்டுமானாலும் பேச "உரிமை" உள்ளவர்.

ஆனால் மூத்த வழக்கறிஞரும், அரசமைப்பு சட்ட நிபுணர் என்று அறியப்படுபவருமான வழக்கறிஞர் வேணுகோபால் அவர்களும் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டு வாதிட்டிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.

அது இருக்கட்டும், 80 கோடி மக்களின் கருத்தை இவர்கள் எப்பொழுது கேட்டறிந்தார்கள்? 80 கோடி மக்களின் நம்பிக்கைகளைப் பற்றிப் பேச இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? இந்திய நாட்டின் 80 கோடி மக்கள் அது இராமர் பாலம்தான் என்று நம்பிக்கொண்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்களே, அப்படியானால், நாசா செயற்கைக் கோள் புகைப்படத்தை வெளியிடும்வரை அம்மக்களின் நம்பிக்கையை இவர்கள் அறியாமல் இருந்ததேன்?

No comments: