Monday 23 July 2007

லண்டன் தமிழருக்கு அடி-சென்னை சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் அடாவடி: 7 பேர் கைது




லண்டனைச் சேர்ந்த தமிழரின் கைக் குழந்தை பந்தைத் திருடி விட்டதாக கூறி, அவரது கையில் இருந்த பந்தைப் பறித்ததோடு நில்லாமல், அந்த தொழிலதிபரையும் சரமாரியாக அடித்து உதைத்த சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் 6 பேர் மற்றும் கண்காணிப்பாளரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை தி.நகரில் ரங்கநாதன் தெருவில் உள்ளது சரவணா ஸ்டோர்ஸ். இந்த நிறுவனத்தின் மீது மாம்பலம் காவல் நிலையத்தில் ஏராளமான புகார்கள் உள்ளன.
இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அடாவடி, அராஜகங்கள் செய்தது தொடர்பாக பலமுறை புகார்கள் வந்துள்ளன.

ஒருமுறை பெரிய தொழிலதிபரின் மனைவியையே அடைத்து வைத்ததாகவும் புகார் எழுந்தது. அவர் மானபங்க முயற்சி நடந்ததாகக் கூட புகார் கூறினார். இந்த ஊழியர்களின் அராஜக செயல்கள் குறித்து பலமுறை போலீஸில் புகார்கள் கொடுக்கப்பட்டு, சிலமுறை நடவடிக்கைகள் எடுத்தும் கூட இன்னும் அவர்கள் திருந்தியபாடில்லை.

இந் நிலையில், லண்டனைச் சேர்ந்த தமிழரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர் சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள். லண்டனில் வசிக்கும் இளஞ்செழியன் தனது மனைவி குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார்.
வழக்கமாக சென்னைக்கு வரும் வெளியூர்க்காரர்கள் சரவணா ஸ்டோர்ஸுக்குப் போவது போல இவரும் குடும்பத்துடன் போய் பொருட்களை வாங்கியுள்ளார்.

அப்போது அவரது கைக் குழந்தையிடம் பந்தைப் பார்த்த கடை ஊழியர்கள், அதை அவர் திருடி விட்டதாக கூறி பறித்துள்ளனர். ஆனால் அந்தப் பந்துக்குப் பணம் கொடுத்து விட்டதாக கூறிய இளஞ்செழியன், அதற்கான பில்லையும் காட்டியுள்ளார்.

ஆனால் அதைக் கண்டுகொள்ளாத கடை ஊழியர்கள் இளஞ்செழியனை சரமாரியாக அடித்துள்ளனர். காசு கொடுத்து பொருளை வாங்கி, தேவையில்லாமல் அடியையும், அவமரியாதையையும் வாங்கிய அதிர்ச்சியில் இளஞ்செழியன் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார் 6 ஊழியர்களைக் கைது செய்தனர். பின்னர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுதலை ஆகி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று கடை கண்காணிப்பாளர் லிங்கராஜன் கைது செய்யப்பட்டார். அவரை இன்று நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.

No comments: