Sunday, 15 June 2008

விலைவாசி உயர்வு: பாதிப்பில் 10 கோடி பேர்!


உலகத்தில் உணவுப் பொருட்களின் விலையேற்றத்தால் 10 கோடி மக்கள் நிரந்தர பாதிப்பில் தள்ளப்படும் அபாயத்தில் இருப்பதாக உலகத் தலைவர்கள் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.


ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு இத்தாலி தலைநகர் ரோமாபுரியில் உச்சி மாநாட்டை நடத்தியது. இத்தாலிய அதிபர் ஜியோர்ஜியா நேப்லிடானோவின் துவக்க உரையைத் தொடர்ந்து உலகத் தலைவர்கள் உரையாற்றினர்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் உணவுப் பொருட்களின் விலை இரண்டு மடங்குகளாக உயர்ந்துள்ளது. அரிசி, சோளம், கோதுமையின் விலை எட்டிப் பிடிக்க முடியாத உயரத்தை அடைந்துள்ளது.


சில உணவுப் பொருட்களின் விலை கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. 44 நாடுகளின் தலைவர்கள் ரோம் உச்சி மாநாட்டில் பங்கேற்றனர்.


ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நிஜாத் முதன்முறையாக ஐரோப்பாவில் கலந்துகொண்ட பொது நிகழ்ச்சியாக இது அமைந்தது.


உலகில் உணவுப் பொருட்க ளின் விலையேற்றத்திற்கு மேற்கு நாடுகளே முக்கியக் காரணம்; குறிப்பாக அமெரிக்கா இதற்கு முக்கியப் பொறுப்பேற்க வேண்டி யதிருக்கும் என்று அஹ்மத் நிஜாத் தெரிவித்தார்.

விமானங்களில் கட்டண சலுகை : ஏர்இந்தியா அறிவிப்பு


சென்னை :

உள்நாட்டு விமானங்கள் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்கு முன்னதாக டிக்கெட் பதிவு செய்தால், கட்டண சலுகை வழங்கப்படும் என்று ஏர்இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.


இந்திய அரசு நிறுவனமான ஏர்இந்தியா, ஸ்பாட் பேர் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.


இத்திட்டத்தின்படி, உள்நாட்டில் விமானம் புறப்படுவதற்கு 6 மணி நேரத்திற்குள்ளாக, விமான டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை அளிக்கப்படும்.


இதன்படி சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்கான கட்டணம் 15 ஆயிரம் ரூபாய் என்றும், இச்சிறப்புத் திட்டத்தின்படி டிக்கெட் பதிவு செய்பவர்களுக்கு 5400 ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஏர்இந்தியா அறிவித்துள்ளது.


இதற்கான டிக்கெட்களை விமான நிறுவன அலுவலகம், விமான நிலையம் மற்றும் இன்டெர்நெட்டிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


இந்தத் திட்டத்திற்கு விமான பயணிகள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை

Tuesday, 10 June 2008

கச்சா விலையேற்றமும் - லாப‌க் கொள்ளையும்!

2003ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்ததையடுத்து ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பை தொடர்ந்து சர்வதேச அளவில் உயரத் தொடங்கிய கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இருமடங்காக அதிகரித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2004ஆம் ஆண்டு ஒரு பீப்பாய் கச்சா விலை 35 டாலராக இருந்தது, இந்த 4 ஆண்டுகளில் 400 விழுக்காடு அதிகரித்திருப்பதால் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தாறுமாறாக ஏற்றுவதைத் தவிர வேறு வழியின்றி உலக நாடுகள் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்த விலையேற்றத்திற்கான காரணமும், அதை முன்னரே உலக நாடுகள் கணிக்கத் தவறியது ஏன் என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய அவசியம் எழுகிறது.


முதலில் கடந்த ஒரே ஆண்டில் இந்த அளவிற்கு கச்சா விலையேறியதற்கு கூறப்படும் காரணங்களைப் பார்ப்போம்.


1) ஆப்ரிக்க நாடான நைஜீரியாவிலும், வடக்கு கடல் என்றழைக்கப்படும் இங்கிலாந்து - ஐரோப்பா இடையிலான கடற்பகுதியிலுள்ள எண்ணெய் கிணறுகளிலும் ஏற்பட்ட உற்பத்தி பாதிப்பினால் கடந்த ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மட்டும் கச்சா விலை பேரலுக்கு 101 டாலரிலிருந்து 120 டாலராக அதிகரித்தது. இதே நேரத்தில் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளிலும் தேவை அதிகரித்தது விலையேற்றத்தை மேலும் அதிகப்படுத்தியது.


2) உலக அளவில் கச்சா உற்பத்தி அதன் முழுத் திறனிற்கு இருந்தாலும், கச்சா உற்பத்தி செய்யும் நாடுகளில் ஏற்படும் பிரச்சனைகளால் (உதாரணத்திற்கு நைஜீரியா, வெனிசுலா, ஈராக்) உற்பத்தி பாதிக்கப்படும்போது தேவை - உற்பத்திக்கு இடையிலான இடைவெளி அதிகரிக்க, அதன் விளைவாக விலை உயர்த்தப்படுகிறது.


3) உலக கச்சா எண்ணெய் தேவை 2008இல் நாள் ஒன்றிற்கு 1.2 மில்லியன் பீப்பாய்களாக உயர்ந்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில், 2007ஆம் ஆண்டில் கச்சா விலை 72 டாலரை எட்டியபோதே, உலக அளவில் அடுத்த ஒராண்டில் கச்சா விலை (தேவை அதிகரிப்பதன் காரணமாக) பீப்பாய்க்கு 110 டாலராக (ஸ்பாட் பிரைஸ்) உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த கணிப்பை மீறி மேலும் 10 டாலர் மட்டுமே உயர்ந்துள்ளது. இத்தகவலை வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியேட் என்றழைக்கப்படும் எ‌ண்ணெ‌ய் வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, கச்சா விலையேற்றம் திடீரென்று, எதிர்பாராமல் முளைத்து விடவில்லை என்பது தெளிவாகிறது.


4) எண்ணெய் உற்பத்தி நாடுகளை இரண்டு பிரிவுகளாக பிரிக்கலாம். ஒன்று ஓபெக் என்றழைக்கப்படும் கச்சா உற்பத்தி - ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு. இவ்வமைப்பில் செளதி அரேபியா, ஈரான், ஈராக், குவெய்த், வெனிசுலா, அல்ஜீரியா, நைஜீரியா, ஐக்கிய அரபு நாடுகள், கட்டார் உள்ளிட்ட 12 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. மற்றவை எவ்வித சர்வதேச அமைப்பும் இன்றி தனித்த கச்சா உற்பத்தி நாடுகள் - ரஷ்யா, அமெரிக்கா, கனடா போன்றவை. இதில் ஓபெக் நாடுகள் - சர்வதேச அளவில் பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவை அதிகரித்தாலும் - கச்சா உற்பத்தியை பெருக்கவில்லை.


ஓபெக் அல்லாத நாடுகளின் ஒட்டு மொத்த உற்பத்தியை விட, ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோலியப் பொருட்களின் தேவை நாள் ஒன்றிற்கு 1 மில்லியன் பீப்பாய் அளவிற்கு அதிகரித்துக்கொண்டே போகிறது. அதாவது ஓபெக் அல்லாத நாடுகள் உற்பத்தியை அதிகப்படுத்தினாலும் தேவை அதிகரிப்பதால், அவைகளின் உற்பத்தியைக் கொண்டு ஈடு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக சந்தைப் பொருளாதார நியதியின்படி (Supply - Demand), உற்பத்தியைவிட தேவை அதிகரிப்பதால் விலையேறுகிறது. இந்த விளக்கத்தைத்தான் அனைத்து நாடுகளும் அளித்துக் கொண்டிருக்கின்றன.


கச்சா விலையேற்றத்திற்கு இதுவரை கூறப்படும் காரணங்களில் கேள்விக்குறியது எதுவெனில், சர்வதேச தேவை இந்த அளவிற்கு அதிகரித்துவரும் நிலையில் ஓபெக் நாடுகள் தங்களது உற்பத்தியை பெருக்காத்தது ஏன்? என்பதே. 1973இல் நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் மில்லியன் பீப்பாய் கச்சா உற்பத்தி செய்த ஓபெக், 1977இல் மிக அதிகபட்சமாக 34 ஆயிரம் மில்லியன் பீப்பாய் அளவிற்கு உற்பத்தியைப் பெருக்கியது. அதன்பிறகு சர்வதேச அளவில் தேவை குறையக் குறைய (விலையும் தொடர்ந்து குறைந்து வந்த நேரத்தில்) உற்பத்தியைக் குறைத்தது. நாள் ஒன்றிற்கு 15 ஆயிரத்திற்கும் குறைவாக உற்பத்தி சரிந்தது.

1985ஆம் ஆண்டிற்குப் பிறகு சர்வதேசத் தேவை தொடர்ந்து அதிகரிக்க அதிகரிக்க கச்சா உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்த ஓபெக், 2005ஆம் ஆண்டு 33 ஆயிரம் மில்லியன் பீப்பாய் அளவிற்கு உயர்த்தியது. ஆனால் அதற்குப் பிறகு - சர்வதேச அளவில் தேவை நாளுக்கு நாள் (ஆசிய நாடுகளின் தேவை) அதிகரித்துக் கொண்டிருந்த வேளையில் உற்பத்தியைக் குறைக்கத் துவங்கியது.

2007ஆம் ஆண்டில் ஓபெக் நாடுகளின் ஒட்டுமொத்த உற்பத்தி நாள் ஒன்றிற்கு 30 ஆயிரம் மில்லியன் பீப்பாய்களுக்கும் குறைந்தது. தனக்குள்ள கூடுதல் உற்பத்தித் திறனையும் ஓபெக் நாடுகள் - குறிப்பாக செளதி அரேபியா - பயன்படுத்தவில்லை.


2005இல் கச்சா விலை ஒரு பீப்பாய்க்கு 40 முதல் 50 டாலர்களாக இருந்தது. அப்பொழுது செய்த உற்பத்தியையே இப்பொழுதும் தொடர்கின்றன செளதி உள்ளிட்ட ஓபெக் நாடுகள். கடந்த 4 ஆண்டுகளில் 400 விழுக்காடு விலையுயர்ந்துள்ள நிலையில், தங்களுடைய உற்பத்திக்கு நான்கு மடங்கு வருவாய் பெற்றுள்ளன ஓபெக் நாடுகள்! இதனால்தான் சர்வதேச அளவில் கச்சா விலை பீப்பாய்க்கு 135 டாலர்கள் வரை உயர்ந்துள்ள நிலையிலும் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஓபெக் நாடுகள் வாய் திறக்கவில்லை.

வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் கூட்டத்தில்தான் உற்பத்தி குறித்து பேசப்போவதாகவும், அதுவரை தங்களுடைய உற்பத்தியில் எந்த மாற்றமும் இராது என்று ஓபெக் அமைப்பு கூறியுள்ளது.அமெரிக்கா, கனடா உள்ளிட்ட கச்சா உற்பத்தி நாடுகளே இந்த விலையேற்றத்தினால் பெரும் பிரச்சனையை சந்தித்துவரும் நிலையில், உலக நாடுகள், உற்பத்தியை அதிகரிக்குமாறு இந்த ஓபெக் நாடுகளின் மீது ஏன் அழுத்தம் தரவில்லை என்ற கேள்வி எழுகிறது.இதற்கு பதில் அமெரிக்காவிலிருந்துதான் (ஓரளவிற்கு) கிடைத்துள்ளது.


பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றத்தினால் அமெரிக்க சந்தித்துவரும் பொருளாதார பின்னடைவுத் தொடர்ந்து, இந்த விலையேற்றத்தினால் பெரும் லாபம் ஈட்டிவரும் அமெரிக்க பெட்ரோலிய நிறுவனங்களின் நிர்வாகிகளை அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நீதிக் குழு (Judiciary committee) உறுப்பினர்கள் கடந்த வாரம் புதன் கிழமையன்று கேள்வி கேட்டு குடைந்துள்ளனர்.


கச்சா எண்ணெய் விலையேற்றத்தைப் பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளீர்களே, உங்களுடைய வணிக நடவடிக்கைகளால் உருவாகிவரும் பொருளாதார பின்னடைவு எந்த விதத்திலாவது உங்களுடைய மனசாட்சியை பாதிக்கிறதா? என்று செனட்டர் ரிச்சர்ட் டர்பின் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்த பிபி அமெரிக்கா எனும் பெட்ரோலிய நிறுவனத்தின் தலைவரான ராபர்ட் மலோன், “உலக சந்தையை எங்களால் மாற்ற முடியாது.


அமெரிக்காவிலும், மற்ற நாடுகளிலும் தேவை அதிகரிப்பிற்கேற்ப கச்சா மற்றும் மரபு சாரா எரிபொருள் உற்பத்தியை பெருக்கத் தவறியதே இன்றைய விலையேறத்திற்குக் காரணம்” என்று கூறியுள்ளார். “அமெரிக்க குடியரசுத் தலைவராக ஜார்ஜ் புஷ் பதவியேற்றதற்குப் பிறகு கச்சா விலை 400 விழுக்காடு அதிகரித்திருப்பது ஏன்?” என்று கேள்வி எழுப்பிய செனட் நீதிக் குழுவின் தலைவர் பேட்ரிக் லீஹி, ‘தேவை - உற்பத்தி நியதிப்படி பார்த்தாலும் கச்சா எண்ணெய் விலை 55 முதல் 60 டாலர் அளவிற்குத்தானே உயர்ந்திருக்க வேண்டும், சரியாக இயங்கும் போட்டிச் சந்தையில் இந்த அளவிற்கு உயர என்ன காரணம்?” என்று கேட்டுள்ளார்.

இக்குழுவின் மற்றொரு உறுப்பினரான (ஆளும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்) ஆர்லென் ஸ்பெக்டர், “எக்ஸான் மொபில் நிறுவனத்தின் லாபம் கடந்த 5 ஆண்டுகளில் 11.5 பில்லியன் டாலர்களில் இருந்து 40.6 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனம் ஒன்று இந்த அளவிற்கு லாபத்தை அடையும் போது பயனாளர்கள் இந்த அளவிற்கு பாதிப்பிற்குள்ளாவதற்கான காரணம் புரியவில்லை” என்று கூறியுள்ளார்.


இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சற்றும் பதற்றமடையாமல் பதிலளித்த எண்ணெய் நிறுவனங்களின் நிர்வாகிகள், எண்ணெய் இருப்பைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் காரணங்களைக் காட்டி தடுப்பதும், அதிகமான வரி விதிப்பும் விலையேற்றத்திற்கு மற்ற காரணங்கள் என்று கூறியுள்ளனர்.எக்ஸான் மொபில், கோனாக்கோ ஃபிலிப்ஸ், ஷெல் ஆயில், ஷேவ்ரான், பிபீ ஆகிய அமெரிக்காவின் 5 முன்னனி எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனங்களும் கச்சா எண்ணெய் விலையேற்றத்தின் காரணமாக இந்த ஆண்டின் முதல் 3 வாரங்களில் மட்டும் 36 பில்லியன் டாலர் (1 பில்லியன் டால‌ர் = 100 கோடி x 42 ரூபாய் = ரூ.1,51,200 கோடி) லாபம் சம்பாதித்துள்ளன.

ஷேவ்ரான் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான ராபர்ட்சன், “எங்களுக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லை. மாறாக, இந்த அளவிற்கு லாபம் ஈட்டியதற்காக பெருமைப்படுகிறோம்” என்று கூறியுள்ளார்.இந்த விசாரணை நடந்து கொண்டிருந்தபோது எண்ணெய் நிறுவனங்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.

ஆக, விஷயம் இதுதான், கச்சா எண்ணெய் தேவை அதிகரிப்பதனால் ஏற்படும் தட்டுப்பாட்டை பயன்படுத்தி எண்ணெய் நிறுவனங்களும், ஓபெக் உள்ளிட்ட நாடுகளும் பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன.

ஓபெக் நாடான செளதி அரேபியாவிற்கு அடுத்தப்படியாக உலக அளவில் கச்சா உற்பத்தி செய்யும் நாடான ரஷ்யாவும் இந்த விலையேற்றத்தினால் சர்வதேச சந்தையில் ‘நல்ல’ லாபம் ஈட்டுவது மட்டுமின்றி, வரி விதிப்பின் மூலம் உள்நாட்டிலும் வருவாயை அதிகரித்துக் கொள்கிறது.எனவே கச்சா உற்பத்தி நாடுகள் அனைத்தும் இன்றைய நிலையில் ஓரணியில் நின்று லாப கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. அதுதான் இந்த வானளாவிய விலை உயர்விற்குக் காரணம்.

தங்களுடைய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துவரும் இப்பிரச்சனையை இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் உலகிலேயே அதிகமாக பெட்ரோலியப் பொருட்கள் தேவை கொண்டுள்ள நாடான அமெரிக்காவில், பொருளாதார பின்னடைவு, பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவற்றால் அதன் அன்றாடத் தேவை 190,000 பீப்பாய் அளவிற்கு குறைந்துள்ளது.

எத்னாலை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியிருப்பதால் அந்நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் பயன்பாடு இந்த ஆண்டில் நாள் ஒன்றிற்கு மேலும் 330,000 பீப்பாய்கள் அளவிற்கு குறையும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Sunday, 8 June 2008

இன்றைய உலகில் முஸ்லிம்களின் வாழ்வு

مَنْ كَانَ يُرِيدُ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا نُوَفِّ إِلَيْهِمْ أَعْمَالَهُمْ فِيهَا وَهُمْ فِيهَا لاَ يُبْخَسُونَ أُوْلَائِكَ الَّذِينَ لَيْسَ لَهُمْ فِي الآخِرَةِ إِلاَّ النَّارُ وَحَبِطَ مَا صَنَعُوا فِيهَا وَبَاطِل ٌ مَا كَانُوا يَعْمَلُونَ

எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய கூலி இவ்வுலகத்திலேயே நிறைவேறும். அவற்றில் அவர்கள் குறைவு செய்யப்பட மாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவுமில்லை. (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன. அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே.
(அல்குர் ஆன் 11:15,16)

ஒருவர் தனது சமீபத்திய சாதனைகளைப் பற்றி மிகைப்படுத்திக் கூறிக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் சமீபத்தில் வெளியான மிகப் பிரபலமான பாடல் ஒன்றை முணுமுணுத்துக் கொண்டிருப்பார், அடுத்து இன்னுமொருவர் புகைத்துக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் சினிமா சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசித்துக் கொண்டிருப்பார், இன்னும் ஒருவர் இன்னொருவரைத் திட்டிக் கொண்டிருப்பார், அடுத்து ஒருவர் பிறரை வஞ்சித்துக் கொண்டிருப்பார், இப்படி ஏகப்பட்ட அவலங்களைச் சுமந்து கொண்டிருக்கின்ற சூழ்நிலைகளில் வாழக் கூடியவரும், இன்னும் பேசினால் புறமும், கோள் சொல்லுதலும், ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டும், விளையாட்டு போட்டிகளின் முடிவுகள் எப்படி இருக்கும், யார் வெற்றி பெறுவார்கள் என்று புலம்பிக் கொண்டு பந்தயங்களைக் கட்டிக் கொண்டிருக்கக் கூடிய மக்களின் கூட்டத்தில் வாழக் கூடிய ஒருவருக்கு எப்படி ஈமானின் வேகம் அதிகரிக்கும்.

இத்ததைகய சூழ்நிலையில் வாழக் கூடிய ஒருவருக்கு இந்த உலக வாழ்க்கையின் அம்சங்கள் தான் ஞாபகம் வருமே ஒழிய, இறை நம்பிக்கையும், இஸ்லாமிய ஒழுக்க மாண்புகளும் எவ்வாறு ஞாபகத்திற்கு வரும்?! இன்றைக்கு நாம் வாழக் கூடிய சூழ்நிலைகள் இவ்வாறு தான் இருந்து கொண்டிருக்கின்றன. இருவர் சந்தித்து விட்டால் வியாபாரம், வேலை, பணம், முதலீடு, வேலை சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சம்பள உயர்வு, சம்பள வெட்டு, பதவி உயர்வு, திட்டங்கள் போன்றவற்றைப் பற்றித்தான் அதிகம் பேசக் கூடியவர்களாகவும், அவர்களது சம்பாஷனைகள் யாவும் இதனைச் சுற்றியே தான் அமைந்திருக்கக் கூடியதாகவும் இருக்கின்றன.

இன்றைய முஸ்லிம்களின் வீடுகளில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்றால் ஷைத்தானிய சக்திகளின் பிடியில் தான் இன்றைய முஸ்லிம்களின் வீடுகள் இருந்து கொண்டிருக்கின்றன. அசிங்கமான பாடல்கள் ஒலிக்கக் கூடிய இல்லங்களாகவும், இன்னும் வக்கிரமான சினிமாப் படங்கள், ஆணும் பெண்ணும் கலந்துறவாடும் காட்சிகளைக் கொண்ட படங்கள், பாடல்கள் தான் ஓடிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் அகப்பட்டு விடக் கூடிய முஸ்லிம்களின் இல்லங்களில் எவ்வாறு இஸ்லாமியத் தாக்கம் இருக்கும். மாறாக, ஈமானை இழந்து விட்ட, ஷைத்தானின் பிடியில் சிக்கிச் சீரழியக் கூடிய, மனநோய் கொண்ட சமுதாயமாகத் தான் அது இருக்கும். இந்த உலகமே கதி என்று வாழக் கூடிய ஒருவனது இதயம், இந்த உலகத்திற்கும் இந்த உலகத்தின் ஆதாயங்களுக்கும் அடிமைப்பட்டதாகத் தான் இருக்கும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

தீனாரின் அடிமைகள் மற்றும் திர்ஹத்தின் அடிமைகள், (இவர்களுக்கு) அவனுக்கு அழிவுதான்.
(புகாரி,).


இந்த உலக வாழ்க்கைக்கு குறைந்த அளவு வளங்களே போதுமானதாக இருப்பினும், இந்த மனிதன் இந்த உலக வாழ்வே கதி என்று எண்ணம் கொண்டதன் காரணமாக, அவன் எப்பொழுதும் ஷேர் மார்க்கெட், உற்பத்தி, வியாபாரம் என்று ஓடி ஓடித் திரிகின்ற அவலத்தை நாம் கண்டு வருகின்றோம். இது இறைத்தூதர்(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்றை மெய்பிப்பதாக உள்ளது.

மனிதன் இறைவனை வணங்குவதற்காகவும் இன்னும் ஸகாத் வழங்குவதற்காகவும் தான் நாம் வளங்களை இறக்கி வைத்தோம், ஆனால் ஆதத்தினுடைய மகன் ஒரு சமவெளியைப் பெற்றிருந்தால், அவன் தனக்கு (இதைப் போல)இன்னொன்று இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான், இன்னும் அவனுக்கு இரண்டு சமவெளிகள் இருந்தால் மூன்றாவதாக ஒன்று நமக்கு இருக்கக் கூடாதா? என்று எண்ணுவான். ஆதத்தினுடைய மகனது வயிற்றில் மண் தான் நிறைந்திருக்கின்றது (அதாவது அவன் என்றைக்கும் திருப்தி அடையவே மாட்டான்), இன்னும் யார் பாவ மன்னிப்புத் தேடிக் கொண்டார்களோ அவர்களது பாவத்தை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.(அஹமது)

செல்வமும், மனைவி மக்களும்''நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு"" என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.
( அல்குர் ஆன் 8:28)

பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; கால்நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது இவை உலக வாழ்வின் சடப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
(அல்குர் ஆன் 3:14)

மேலே குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தில் வருகின்ற இந்த உலகத் தேவைகளான மனைவி மக்கள் செல்வங்கள் ஆகிய யாவும், இறைவனின் மீதுள்ள அன்பைக் காட்டிலும் மிகைத்து விடக்கூடிய அளவில் சென்று விடக்கூடாது. அவ்வாறு செல்லும் பொழுது தான் இறைவனுக்குக் கீழ்படியாமையை அது உருவாக்கி விடுகின்றது. அவ்வாறில்லாமல், இஸ்லாமியச் சட்டங்களின் வரையறைக்குள், இன்னும் இறைவனுக்குக் கீழ்படிகின்ற தன்மையிலிருந்து அவனை வழி தவறச் செய்யாத விதத்தில் அமைந்து விடுமானால், இத்தகைய செல்வங்களும், உறவுகளும் அவனுக்கு மிகப் பயன்தரக் கூடியதாக அமைந்து விடும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இந்த உலகத்தில் பெண்களும், நறுமணங்களும் எனக்கு மிகவும் விருப்பமானவைகளாக இருந்தும் கூட, இவை அனைத்தைக் காட்டிலும் தொழுகை தான் எனக்கு மிக மிக விருப்பமானதாக இருக்கின்றது என்றார்கள்.
அநேக ஆண்கள் தங்களது மனைவிமார்களின் விருப்பங்களைப் பின்பற்றி நடக்கக் கூடியவர்களாகவும், அந்த விருப்பங்கள் ஹராமான வழியில் இருந்தாலும் அவற்றைத் தடுக்க இயலாமலும், தங்களது குழந்தைகளை தொழுகை போன்ற இறைவணக்கங்களில் ஈடுபடுவதற்கு ஆர்வமூட்டாமல், அவர்களை பள்ளிவாசல் பக்கமே ஒதுங்கவியலாத அளவுக்கு வளர்க்கின்ற பழக்கத்தையும் நாம் கண்டு வருகின்றோம்.

இறைத்ததூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அச்சத்திற்கும், கபடத்திற்கும், ஏமாற்றத்திற்கும் இன்னும் கஞ்சத்தனத்திற்கும் காரணமாக உங்களது குழந்தைகள் உங்களை ஆளாக்கி விடுவார்கள். (தப்ராணி, அல் ஜாமீஈ ).

கஞ்சத்தனம் என்பது என்னவென்றால், இவன் அல்லாஹ்வினுடைய பாதையில் ஒரு பொருளைச் செலவு செய்ய எண்ணியிருப்பான். அப்பொழுது ஷைத்தான் குறுக்கிட்டு அல்லாஹ்வின் பாதையில் இந்தப் பொருளை நீ செலவழித்து விட்டால், உன்னுடைய குழந்தைகளின் கதி என்னாவது என்பதை நினைவூட்டுவதன் மூலம், அந்தப் பொருளை இறைவனுடைய பாதையில் செலவழிக்க இயலாதவானாக அந்த மனிதனை ஆக்கி விடுகின்றான்.
அறியாமை என்பது என்னவென்றால், இவன் அறிஞர்களின் உரைகள் மற்றும் கல்வியைத் தேடி அறிவைப் பெருக்கிக் கொள்வதற்காக முயற்சி செய்யும் பொழுது, குழந்தைகள் குறுக்கிட்டு அறிவைத் தேடிச் செல்வதனின்றும் இவனைத் தடுக்கக் கூடியதாக இருந்து விட்டால், அதுவே அவனது அறியாமையைக் காரணமாகி விடும்.

கவலை என்பது என்னவென்றால், அவன் செல்லமாகப் போற்றி வளர்க்கக் கூடிய அந்தக் குழந்தை நோய்வாய்ப்பட்டு விட்டால் அதற்காகக் கவலை கொள்ளக் கூடியவனாகவும், இன்னும் தன்னுடைய குழந்தை பிரியப்பட்டு ஒரு பொருளைக் கேட்கும் பொழுது அதனை வாங்கிக் கொடுக்கும் அளவுக்கு வசதி இல்லை என்றால், அதற்காகக் கவலைப்படக் கூடியவனாகவும் மனிதன் மாறி விடுகின்றான். இன்னும் தான் வளர்த்த அந்தக் குழந்தை பெரியவானாக ஆகி விட்டதும், தன்னைப் பராமரிக்காமல் விட்டு விட்டால், தான் கஷ்டப்பட்டு அவனை எவ்வாறெல்லாம் வளர்த்தோம், இந்த வயதான காலத்தில் நம்மை இப்படி வெறுமனே தவிக்க விட்டு விட்டுச் சென்று விட்டானே என்று புலம்பக் கூடிய நிலைக்கு விட்டு விடக் கூடியவனாகவும் அவன் மாறி விடுகின்றான்.

மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அம்சங்களைக் கருத்தில் கொண்டு, திருமணமே செய்து கொள்ளாமல், பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்பதல்ல, மாறாக, செல்வங்களும், மனைவி மக்களும் இறைவனது நினைவை விட்டும் ஒருவனை மாற்றி விடக் கூடிய விதத்தில் அமைந்து விடக் கூடாது என்பதும், மனைவி மக்கள் அந்த மனிதனை ஹராமான வழியில் அவர்களின் நலன்களுக்காக பொருளீட்டத் தூண்டுகோளாக அமைந்து விடக் கூடாது என்பதே இதன் கருத்தாகும்.
செல்வங்கள் மனிதனை எவ்வாறெல்லாம் நிலைமாறச் செய்யும் என்பதை

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :

ஒவ்வொரு உம்மத்திற்கும் ஒவ்வொரு �பித்னாக்கள் (குழப்பங்கள், கோளாறுகள்) உண்டு. என்னுடைய உம்மத்தைப் பொறுத்தவரை செல்வம் தான் அந்த �பித்னவாக இருக்கும்.
(திர்மிதி 2336)

செல்வத்தை அதிகம் சேகரிக்க வேண்டும் என்ற ஆசையானது, ஆட்டிற்கு பக்கத்தில் இருக்கக் கூடிய ஓநாய் எவ்வாறு ஆட்டை வெகு சீக்கிரத்தில் கபளீகரம் செய்து விடுமோ, அதைப் போல செல்வத்தின் மீதுள்ள ஆசை ஒருவனது மார்க்கத்தையே அழித்து விடும். இதைத்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் :
இஸ்லாமிய மார்க்கத்தில் இருந்து கொண்டிருக்கின்ற ஒருவனது பொருளாசையானது, இரண்டு பசி கொண்ட ஓநாயிடம் அகப்பட்ட ஆட்டிற்கு நேரக் கூடிய பாதிப்பை விட அதிகப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்.
(திர்மிதி)

எனவே தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், உங்களது தேவைகளுக்கு எவ்வளவு போதுமானதாக இருக்குமோ அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள், தேவைக்கு மிஞ்சக் கூடிவைகள் இறைவனது நினைவை விட்டும் உங்களை பராக்காக்கி விடும்.

தான தர்மம் செய்யாமல், பணத்தைச் சேகரித்து வைப்போரை இறைத்தூதர் (ஸல்) எச்சரித்திருக்கின்றார்கள்.என்னுடைய செல்வம் இங்கிருக்கின்றது, இங்கிருக்கின்றது. இங்கிருக்கின்றது என்று கூறி, தனக்கு முன்னாலும், பின்னாலும், வலப்புறமும், இடப்புறமும் (தான தர்மங்களுக்காக) செல்வத்தை வாறி வழங்குகின்றாரே அத்தகையவரைத் தவிர, செல்வத்தைச் சேகரித்து வைக்கின்றார்களே அவர்களுக்கு நாசம் உண்டாகட்டும்.
(இப்னு மாஜா).

உலகமே கதிஇறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் :

(இம்மையில் தம் விருப்பம் போல்) புசித்துக் கொண்டும், சுகம் அனுபவித்துக் கொண்டும் இருக்க அவர்களை விட்டு விடுவீராக அவர்களுடைய வீணான ஆசைகள் (மறுமையிலிருந்தும்) அவர்களைப் பராக்காக்கி விட்டன (இதன் பலனைப் பின்னர்) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.
(அல்குர் ஆன் 15:03)

அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் :நீங்கள் உங்கள் மன இச்சையைப் பின்பற்றுவது குறித்து நான் பயப்படுகின்றேன் இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும், மன இச்சையைப் பின்பற்றுவதும் சத்தியத்தை மறக்கச் செய்துவிடும், இன்னும் அதிக நாள் வாழ வேண்டும் என்ற ஆசையானது மறுமையை மறக்கச் செய்துவிடும்.
(�பத்ஹுல் பாரி 11�236)

ஒருவரது ஈமானின் உறுதியை இழக்கக் செய்யக் கூடிய இன்னுமொரு அம்சம் என்னவென்றால், அதிகமாக உண்பது, இரவில் மிக நீண்ட நேரம் விழித்திருப்பது, அதிகமாகப் பேசுவது மற்றும் அதிகமான நேரங்களை மற்றவர்களுடன் கூடியிருந்து (அரட்டைகளில்) கழிப்பது. யார் அதிகமாக உண்கிறார்களோ அவர்களது உடம்பு பெருத்து விடும், இத்தகைய தன்மைகள் இறைவனை நினைவு கூர்வது மற்றும் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதில் சோம்பேறித்தனத்தை உண்டாக்கி விடுவதோடு, இத்தகைய நபர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில் ஷைத்தானுக்கு மிக எளிதாகவும் இருக்கும்.

எவரொருவர் அதிகமாக உண்கிறாரோ, குடிக்கின்றாரோ இன்னும் தூங்குகின்றாரோ அத்தகையவர்கள் இறைவனது வெகுமதியை இழந்து விடுகிறார்கள். அதிகமாகப் பேசுவது இதயத்தை இறுகச் செய்து விடுகின்றது, அதிகமான மக்களுடன் வீணாகத் தன்னுடைய நேரங்களைக் கழிப்பவர்களுக்கு தனியாக இருந்து தன்னுடைய நிலைகளைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரம் கிடைக்காது.

அதிகமாகச் சிரிப்பது ஒருவனது இதயத்தின் வாழ்நாளையை பாழடித்து விடும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அதிகமாகச் சிரிக்காதீர்கள், அதிகமாகச் சிரிப்பது இதயத்தை மரணிக்கச் செய்து விடும்.
(இப்னு மாஜா)

ஒருவனது நேரங்கள் வணக்க வழிபாட்டுடன் கூடியதாக இறைவனுடைய ஞாபகத்தை அதிமதிகம் நினைவு கூரத்தக்க விதத்தில் கழியவில்லை என்றால், அவன் குர்ஆனை உதறித் தள்ளி விட்டுச் செல்லக் கூடியவனாகவும், இன்னும் இறை நம்பிக்கையாளர்களின் அறிவுரைகளைக் காதில் வாங்கிக் கொள்ளவும் மாட்டான்.

ஈமானைப் பலவீனப்படுத்தக் கூடிய அம்சங்கள் ஏராளமாக இருந்தும், இங்கே நாம் அவற்றில் சிலவற்றைத் தான் குறிப்பிட்டிருக்கின்றோம். இங்கே குறிப்பிடப்படாத சில அம்சங்கள் உங்களது வாழ்க்கையில் உங்களை பாதித்திருக்கலாம், அதனை நீங்கள் கூர்ந்து கவனிப்பதன் மூலம் நீங்களே அறிந்து கொள்ளலாம். நமது இதயங்களை அல்லாஹ் சுத்தப்படுத்தி, கெட்ட செயல்பாடுகளிலிருந்து நம்மைக் காத்தருளப் பிரார்த்திப்போமாக! ஆமீன்!!

Saturday, 7 June 2008

சிறப்புச் செய்தி



இந்துத்துவா பற்றிய பழ. நெடுமாறனின் புதிய நூல்


இருள் மண்டிக் கிடக்கும் இந்திய அரசியல் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளையும் உரைக்கப்படாத சதிகளையும் உலகறிய ஏந்திவரும் புதிய நூல்!


பழ. நெடுமாறன் எழுதிய உருவாகாத இந்திய தேசியமும் உருவான இந்து பாசிசமும் இந்நூல் சிறைக்கோட்டத்தில் செதுக்கப்பட்டது

ஏறத்தாழ 800 பக்கங்கள் விலை ரூபாய் 350/-
வெளிநாடு ஒரு நூல் : $ 17/-10 நூல்கள் : $ 150/-(அஞ்சல் செலவு உள்பட)
காசோலைகள் வரைவோலைகள் "தமிழ்க்குலம்" என்ற பெயரில் இருக்க வேண்டும்.


Payment documents to be drafted in the name of "Tamil Kulam"


வெளியீடு:

தமிழ்க்குலம்

33, நரசிம்மபுரம் மயிலை,

சென்னை - 600 004.

தொ. பே - 91-44-24640575