Tuesday, 31 July 2007

ஷார்ஜா சாலை விபத்தில் தமிழர் உள்பட 5 இந்தியர்கள் பலி


ஷார்ஜாவில் மினி பஸ்ஸும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உள்பட 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஒரு கட்டுமானக் கம்பெனியைச் சேர்ந்த மினி பஸ்ஸில், தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து ஷார்ஜாவில் உள்ள சஜா என்ற பகுதிக்கு வேலைக்காக போய்க் கொண்டிருந்தனர். அந்தப் பேருந்து ஷார்ஜா - அல்தாஹித் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, 7வது வளைவில் எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். லாரி டிரைவர் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷார்ஜாவில் உள்ள அல்-குஸாமி மற்றும் குவைத்தி மருத்துவமனையிலும், அஜ்மானில் உள்ள கலீபா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினி பஸ்ஸின் டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இறந்தவர்கள் விவரம்

1. ரங்கராஜன் பெருமாள் (25), தமிழ்நாடு.
2. தாமஸ் தாமஸ் (51), கும்பநாடு, கேரளா.
3. பிரகாஷ் ராம் (45), பஞ்சாப்.
4. கேசவன் அஜீத் (37), திருவனந்தபுரம்.
5. ஷோபன் மணிகண்டன் (30), திருவனந்தபுரம்.
இவர்களில் அஜீத்தும், ராமும் அந்தக் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தனர். மற்றவர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள். விபத்தில் சிக்கிய லாரி, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றபோது எதிரே வந்த மினி பஸ்ஸுடன் மோதியது. இந்த விபத்தில் மொத்தம் 17 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் இந்தியா, நேபாளம், வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப கட்டுமான நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

Monday, 30 July 2007

முஸ்லிம்களின் தேசப்பற்றைக் கண்டு மெய்சிலிர்த்த தினமலர்

ஆம் சுதந்திர தின வைரவிழாவின் நெருக்கத்தில் தான் தினமலருக்கு இஸ்லாமியர்களின் சுதந்திர தாகம் எப்படிப்பட்டதாக இருந்தது என்ற ஞானோதயம் ஏற்பட்டது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் தங்களின் சதவிதத்திற்கு மேலாக கலந்துக் கொண்டவர்களின் எழுச்சியைக் கண்டு தினமலர் மெய்சிலிந்த்து நிற்கும் காட்சியை கீழ்காணும் தினமலரின் வலைதளத்தில் காணலாம்.

Sunday, 29 July 2007

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள்

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங் பரிவாரங்கள்
மக்களாட்சி நடைபெறும் ஒரு குடியரசின் அடிப்படை நிலைநிற்றலுக்கு அவசியமான தூண்களில் தலையாயது கருத்துச் சுதந்திரமாகும்.
உண்மைகளை வெளிப்படுத்த எந்தக் கட்டுப்பாடும் இல்லாத நிலை ஓர் இடத்தில் இருந்தால் மட்டுமே அங்கு சுதந்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம் கொள்ள முடியும். ஏனெனில் கருத்துச் சுதந்திரம் என்பது ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்கும் வல்லமை கொண்டதாகும்.
அந்த வகையில் சுதந்திர இந்தியாவில் கருத்துக்களை வெளியிட அனைவருக்கும் முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவ்வாறு முழுமையாக வழங்கப்பட்ட ஓர் உரிமையை, மேற்கத்திய ஏகாதிபத்தியவாதிகளுக்குப் பிறகு இந்தியாவை முழுமையாகக் கொள்ளை கொள்ளத் துடிக்கும் இந்துத்துவ சங்பரிவாரக் கூட்டங்கள் முழுமையாக ஆக்ரமித்துக் கொண்டு, இந்நாட்டின் மைந்தர்களான குடிமக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டவும், கலகம் விளைவிக்கவும் தக்க வகையில் உண்மைக்கு புறம்பான செய்திகளை தொடர்ந்து திரித்து வெளிப்படுத்தி வருகின்றன.
ஒரு பொய்யை வெவ்வேறு விதமாகத் திரும்பத் திரும்பச் சொன்னால், நாளடைவில் அது உண்மையாகிவிடும் என்பது ஹிட்லர்-கோயபல்ஸ் யுக்தி. நாஜியிச ஹிட்லரின் அடிவந்த சங்பரிவாரங்களும் இதே பாணியை பின்பற்றி வருகின்றனர்.
சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டில் நடந்த அனைத்து கலவரங்களுக்கும், இனப்படுகொலைகளுக்கும் இவ்வாறு உண்மைக்குப் புறம்பாக வெளிப்படுத்தப்படும் செய்திகளும், கட்டுரைகளும் முக்கிய பங்கு வகித்திருக்கின்றன. இதனை நன்றாக உணர்ந்து வைத்துள்ளதாலேயே சங்க்பரிவார சக்திகள் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகளைத் தொடர்ந்து பரப்பி துவேஷத்தை வளர்த்து வருகின்றன.
உலகின் அதிவேக வளர்ச்சியில் இன்று மிகப்பெரும் சக்தியாக ஊடகத்துறையில் உருவெடுத்துள்ளது இணையமாகும். இங்கு கருத்துக்களை வெளியிட எவருக்கும் எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமென்றாலும் செய்திகளை வெளியிடத் தக்க விதத்தில் இணையம் அமைந்துள்ளது தான் இதன் காரணமாகும். இந்தியாவின் எல்லாத்துறையிலும் மற்றவர்கள் கண் உணரும் முன்பே நுழைந்து அவ்விடங்களை ஆக்ரமித்துக் கொண்ட சங்க்பரிவார சக்திகள் இன்றைய அதிசக்தி வாய்ந்த இந்த ஊடகத்தையும் தங்களின் லட்சியத்திற்காக மிக அதிகமாக பயன்படுத்த தொடங்கி விட்டனர்.
கடந்த இரு தினங்களில் பெங்களூரில் நடந்த தென்னிந்திய முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா (Popular Front of India) நடத்திய எம்பவர் இந்தியா (Empower India) மாநாட்டில் கலந்து கொண்ட கர்நாடக உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி கோ. சென்ன பாஸப்பா கூறிய வாசகங்கள் கவனிக்கப்பட வேண்டியதாகும். "இந்தியாவின் கிராமப்பகுதிகளில் கூட இன்று ஃபாஸிஸம் பரவத் தொடங்கியுள்ளது. அம்பேத்கர் மற்றும் பகத்சிங் போன்றவர்களை தங்களது வளர்ச்சிக்காக ஃபாஸிஸ்டுகள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு எதிராக செயல்பட்ட தேச துரோகியான சாவர்க்கரின் படத்தை இந்திய நாடாளுமன்றத்தில் வைக்கும் அளவுக்கு இன்று நிலை மாறியுள்ளது". நீதித்துறையின் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவர் கூறியிருக்கும் இவ்வாசகங்கள் இந்தியாவில் இந்துத்துவ ஃபாஸிஸ்டுகளின் வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்துகிறது. இவர்களின் இந்த வளர்ச்சிக்கு ஊடகங்களின் பொய் பிரச்சாரம் சிறப்பான பங்கு வகித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. இந்நிலை மிகவும் கவலைக்குரியதாகும்.
ஊடகத்திற்கு என்று ஒரு தர்மம் உண்டு. அந்த தர்மத்தை இன்று காற்றில் பறக்கவிட்டுக் கொண்டு அவதூறுகளையும் பொய்களையும் பரப்புவதில் பெரும்பாலான ஊடகங்கள் முன்னணியில் நிற்கின்றன. உண்மைக்குப் புறம்பான விடயங்கள் வெளிப்படுத்தப்படும் பொழுது, அதற்கான மறுப்பு கொடுக்கப்பட்டாலோ, உண்மையான நிலையை வெளிப்படுத்தும் விதத்தில் ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டாலோ அவற்றை உடனடியாக பிரசுரிப்பது கருத்துச் சுதந்திரத்தை காக்கும் ஊடகங்களின் தலையாய கடமையாகும். இதனைப் பெரும்பாலான ஊடகங்கள் செய்து, கருத்துப் பரிமாற்ற நேர்மையைக் காக்கின்றன.
ஆனால் என்ன காரணத்தினாலோ நடுநிலையாகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் சில ஊடகங்கள் கூட பல நேரங்களில் இவ்வாறு உண்மைக்குப் புறம்பான செய்திகள் பரப்பப்படுவதற்கும், அதன் மூலமாக சமூகத்தில் குழப்பம் விளைவித்து கலகங்களை உருவாக்கவும், அதன் மூலமாக இந்துத்துவ சங்பரிவார கூட்டங்களின் வளர்ச்சிக்கும் துணை போய் விடுகின்றன.
இணையத்தில் சங்பரிவார ஃபாஸிஸ கூட்டத்தின் வளர்ச்சிக்காக, பொதுமக்களிடையே பொய்களையும் அவதூறுகளையும் எழுதிப் பரப்புவதற்காகவே ஒரு கூட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் எழுத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு நபர்களால் தோலுரித்து காட்டப்பட்டும் உள்ளது. அந்த வரிசையில் மலர்மன்னன் என்ற பெயரில் எழுதும் ஒரு இந்துத்துவ வெறியர் அடிக்கும் கூத்துக்கள் சொல்லி மாளாது.
தனது எழுத்துக்களில் இந்துத்துவா தனது எதிரியாக வரையறுத்து வைத்துள்ள இஸ்லாம், கிறிஸ்தவம், கம்யூனிஸத்தைக் குறித்து உணமைக்குப் புறம்பான தகவல்களை வரலாறுகளாகவும், நிகழ்வுகளாகவும் தருவது தான் இந்த கோயபல்ஸின் முக்கிய வேலையாகும்.
காந்திஜியைக் கொன்ற மாபாதகன் கோட்சேயின் கொலைவெறியை தனது நாற்றம் பிடித்த எழுத்துக்களால் நியாயப்படுத்தி எழுதிய தேசதுரோகி மலர்மன்னன், முஸ்லிம்களை குறித்தும் இஸ்லாத்தை குறித்தும் நேர்மையாக எழுதுவார் என்று எதிர்பார்க்க முடியாது தான். திண்ணை டாட் காம் என்ற இணைய தளத்தில் இந்திய வரலாறுகளில் பல நிகழ்வுகளைத் திரித்து மக்களிடையே குழப்பத்தையும் துவேஷத்தையும் வளர்க்கும் விதத்தில் உண்மைக்குப் புறம்பாக எழுதியபோது, தோழர் கற்பக விநாயகம் அவர்களால் தோலுரிக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட அவமானத்தால் கூனிக் குறுகி வாழ்க்கை வெறுத்துப் போய் இனி எதைப்பற்றியும் எழுதப் போவதில்லை என்று வடக்கிருந்த தேசத்துரோகி மலர் மன்னன், இன்று சிஃபி டாட் காம் என்ற தளத்தின் தமிழ் பகுதியில் அவதூறுகளை 'எழுத' வேண்டப்பட்டுள்ளார்.
இதே சிஃபி டாட் காம் இணைய தளம் இஸ்லாத்திற்கு எதிராக இணையத்தில் காழ்ப்பைக் கக்கி எழுதும் கயமை நிறைந்த போலி நபரான நேசகுமார் என்ற மற்றொரு இந்துத்துவ பார்ப்பனருக்கு சிஃபியில் தனி இடம் ஒதுக்கியதும் நினைவு கூரத்தக்கதாகும். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமெனினும் தங்கள் மன அழுக்கைக் கொட்டிக் கொள்ளட்டும். அதற்கு இடம் கொடுப்பதும், பிரித்து விடுவதும் அவரவர் விருப்பம் தான். ஆனால் சாதாரண ஊடகங்களுக்குரிய தர்மத்தை இவர்கள் கடைபிடிக்க வேண்டும் இல்லையா?
சமீபத்தில் இந்துத்துவா ஊதுகுழல் மலர் மன்னன், "கலைகள் தந்த தஞ்சை, கவலை தருகிறது" என்று எதுகை மோனையாகத் தலைப்பிட்டு எழுதி இருந்ததை சிஃபி டாட் காம் தமிழ் பதிப்பில் வெளியிட்டிருந்தார்கள். அதில் இருந்த உணமைக்குப் புறம்பான விஷயங்களையும் தவறுகளையும், பல யதார்த்தமான நிலைமைகளையும் சுட்டி சிஃபிக்கு ஒரு மறுப்புரை எழுதி பிரசுரிக்கும் படி கோரியிருந்தேன். மேலும் அக்கட்டுரை சமூகத்தில் மதக் கலவரைத்தைத் தூண்டும் வகையில் கயமை நோக்குடன் அவதூறாக பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளதையும் சுட்டிக் காட்டியிருந்தேன்.
மறுப்பு அனுப்பப்பட்டு மூன்று வாரங்களுக்கும் மிகுந்து நாட்கள் ஆகிவிட்டன. நினைவுறுத்தல் கடிதமும் அனுப்பப்பட்டாயிற்று. இதுவரை சிஃபி தமிழ் தள நிர்வாகியிடமிருந்து மறுப்புரையை பிரசுரிப்பது பற்றியோ அல்லது பிரசுரிக்க முடியாது என்றோ எவ்வித பதிலும் இல்லை. இந்த அளவுக்கு இருக்கிறது சிஃபி தமிழ் தளத்தின் எழுத்து நேர்மையும் கருத்துச் சுதந்திரமும்.
சங்பரிவாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் துணைபோகும் இது போன்ற ஊடகங்களின் உண்மை நிலையை சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். மேலும் வெளியிடப்படும் தகவல்களில் அடங்கியுள்ள உண்மைக்குப் புறம்பான விஷயங்களை மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற பேரவாவில் பல தளங்களை தொடர்பு கொண்டு இறுதியில், தமிழ் முஸ்லிம்களின் இணைய குரலாக வளர்ந்து வரும் சத்தியமார்க்கம் டாட் காம் என்ற தளம் எனது மறுப்புரையை வெளியிட முன்வந்துள்ளது.
நம்மைப் பொறுத்தவரை இஸ்லாமும் முஸ்லிம்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; ஆனால் அதே சமயம் அந்த விமர்சனத்தில் இருக்கும் தவறுகளையும் உண்மைக்குப் புறம்பான வரலாற்றுப் புரட்டுகளையும் சுட்டி தகுந்த விளக்கம் கொடுக்கப்பட்டால் ஏற்கும் அல்லது சான்றுகளுடன் மறுத்துரைக்கும் நேர்மை மட்டுமாவது விமர்சிப்பவர்களிடம் இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். சிஃபியிடம் இத்தகைய கருத்து நேர்மை இல்லையென்பது என்னுடைய மறுப்புரைக்கு அவர்கள் காட்டும் நீண்ட மவுனமும், தேசதுரோகி இந்துத்துவ ஊதுகுழல் மலர் மன்னனின் உணமைக்குப் புறம்பான நாற்றமெடுக்கும் அவதூறு எழுத்துக்களை தொடர்ந்து தங்களது தளத்தில் வெளியிடுவதும் தெளிவாக உணர்த்தி நிற்கிறது.
எனவே சிஃபி வெளியிடும் தேசவிரோதி மலர் மன்னனின் துவேஷ எழுத்துக்களில் உள்ள அவதூறுகளைத் தோலுரிக்கவும் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவும் வாய்ப்பு நல்கிய சத்தியமார்க்கம் டாட் காம் தளத்திற்கு நன்றி கூறி, இங்கு மலர் மன்னனின் அவதூறுகளை மூன்று கூறுகளாகப் பிரித்துத் தொடராக எழுதவிருக்கிறேன். இந்த மறுப்புரைகளை இனி வரும் பகுதிகளில் காண்போம் இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: நல்லடியார்.

Saturday, 28 July 2007

இருமேனி TNTJ பொதுக்கூட்ட விவகாரம்:

  • இருமேனி TNTJ பொதுக்கூட்ட விவகாரம்:கூட்டத்தை தடை செய்ய ஊர் சுன்னத் ஜமாஅத் கடும் முயற்சி.
  • அனுமதி அளித்த காவல் துறை.
  • வுரதட்சனையை ஊக்குவிக்கும் ஊர் சுன்னத் ஜமாஅத்! நியாயத்தை எடுத்து சொல்லும் தவ்ஹீத் ஜமாஅத்!!
  • நக்கீரன் பத்திரிக்கையில் வெளியான பரபரப்பு செய்தி.

28-7-2007 நக்கீரன் பத்திரிக்கை செய்தி:

இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை.


அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃப் விடுதலை
சிட்னி: இலண்டன் மற்றும் கிளாஸ்கோ விமானநிலையங்களைத் தகர்க்க நடந்த சதியில் தீவிரவாதி எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மருத்துவர் ஹனீஃபின் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திரும்பப் பெறுவதாகவும், அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கருதி அவரை விடுதலை செய்ய இருப்பதாக ஆஸ்திரேலிய அரசு கூறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் அரசு தலைமை வழக்கறிஞர் டேமியன் பக் பிரிஸ்பேன் நீதிமன்றத்தில் மருத்துவர் ஹனீஃபுக்கு எதிராக அரசு தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் கைவிடப்பட்டுத் திரும்பப் பெறப்படுவதாகக் கூறினார். இவ்வழக்கைக் கையாண்டதில் அரசின் அனைத்துத் துறையினரும் பொறுப்பற்ற நிதானமின்மையை வெளிப்படுத்தினர் என அவர் ஒப்புக் கொண்டார்.

இதனால் பெரும் மன உளைச்சலுக்கும் உளவியல் ரீதியான தாக்குதலுக்கும் ஆளான மருத்துவர் ஹனீஃபின் குடும்பத்தினர் மட்டுமல்லாது பெங்களூரைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் இச்செய்தி குறித்து மகிழ்ச்சி ஆரவாரம் தெரித்தனர்.

கடுமையான சூழலுக்கு உட்படுத்தப்பட்ட மருத்துவர் ஹனீஃபிடம் ஆஸ்திரேலிய அரசு மன்னிப்புக் கோருமா என்ற நிருபர்கள் கேள்விக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஜான் ஹோவர்டு அதற்கான சாத்தியம் இல்லை என்று பதிலளித்தார்.

குற்றம் சாட்டுவதும் வழக்குத் தொடுப்பதும் காவல் துறையினரதும் அரசு வழக்கறிஞரதுமான வேலை. இதில் நிகழ்ந்த குளறுபடிகளுக்கு பிரதமர் ஏன் மன்னிப்புக் கோரவேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார். விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் ஹனீஃப் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டாலும் அவர் இந்தியாவிற்கு புறப்படுவதற்கான முறையான அனுமதியை ஆஸ்திரேலியா இன்னும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

இது குறித்து ஆஸ்திரேலிய அரசுக்கு இந்திய அரசு தரப்பிலும் வேண்டுகோள் வைக்கப்படும் என இந்திய வெளியுறவு இணை அமைச்சர் E. அஹமது தெரிவித்தார். மருத்துவர் ஹனீஃப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபணம் ஆகியுள்ள நிலையில் இனியும் அவருக்கு அனுமதி வழங்குவதில் கால தாமதம் கூடாது என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே பல்வேறு மனித உரிமைக்குழுக்களும், மருத்துவர் ஹனீஃபின் வழக்கறிஞர்களும் பொய்யாகப் பயங்கரவாதி எனக் குற்றம் சாட்டி மருத்துவர் ஹனீஃபை கொடுமைப் படுத்தியதற்காக ஆஸ்திரேலிய அரசு மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்கப்போவதாகக் கூறியுள்ளனர்.

ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்ற மரபுப்படி நிரபராதி விடுதலையடைந்தார்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளும் சேர்ந்து, முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக டாக்டர் ஹனீஃப் மீது பயங்கரவாதி என குற்றத்தைச் சுமத்தி கைது செய்தார்கள்.

விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. பொய் பித்தலாட்டங்கள் செய்து குழப்பங்கள் எஞ்சியது.

இங்கிலாந்து சொன்னதால் நாங்கள் கைது செய்தோம் என்று ஆஸ்திரேலிய சமாதானம் சொன்னாலும் டாக்டர் ஹனீஃபை கைது செய்யச் சொன்ன இங்கிலாந்திடம் ஆதாரம் கேட்டிருக்க வேண்டும். இரு நாடுகளும் டாக்டர் ஹனீஃபின் விஷயத்தில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது என்பது தெளிவு.